அர்ஷ்தீப் அபார பந்துவீச்சு.. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!

 
Ind vs SA Ind vs SA

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ரீசா ஹென்றிக்ஸ், ரசீ வான் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் டோனி டி ஜோர்ஸி மட்டும் ரன்களை சேகரிக்க போராடினார். இருப்பினும் அவரும் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் அன்டிலே பெலுக்வாயோ மட்டும் 33 ரன்கள் சேர்த்து அவரும் அர்ஷ்தீப்சிங்கின் வேகத்தில் வெளியேறினார்.

Ind vs SA

இதையடுத்து 27.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இதில் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் சாய் சுதர்சனுடன், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர்.

Ind vs SA

இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். வெற்றியை நெருங்கிய சமயத்தில் அரைசதம் அடித்த நிலையில் ஐயர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 117 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

From around the web