உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

 
Neeraj

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் நீரஜ் சோப்ரா.

அமெரிக்காவின் யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

Neeraj

இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேறி இருந்தார். இறுதி போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின் காயம் காரணமாக எந்த தொடரிலும் பங்கேற்காமல் இருந்த நீரஜ் சோப்ரா கடந்த மாதம் மட்டும் 3 தொடர்களில் பங்கேற்றார். இந்த 3 தொடர்களில் 1 தங்கம், 2 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றிருந்தார்.

Neeraj

நீரஜ் சோப்ரா கூறுகையில், “ஈட்டி எறிவதற்கு கையின் வேகத்தை மேம்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. இயற்கையாகவே எனது கையின் வேகம் சிறப்பாக இருக்கிறது. கையின் வேகத்தை அதிகரிப்பதற்காக மிக அதிக உடற்பயிற்சிகளையும் செய்ய முடியாது. அதேநேரம், குறைந்த எடையிலான ஈட்டியை எறிந்து பயிற்சியில் ஈடுபடுவோம்” என்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web