ஓய்வு பெறுகிறார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்!! ரசிகர்கள் அதிர்ச்சி

 
Roger-Federer

லண்டனில் அடுத்த வாரம் நடைபெறும் லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் ரோஜர் பெடரர். இவர் பாரம்பரியமிக்க விம்பியள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்துள்ளார். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர்.

இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 லேவர் கோப்பை போட்டி தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் முற்றிலுமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

Roger-Federer

அந்த அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகள் எனக்கு எத்தனை காயங்கள், அறுவை சிகிச்சை நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அதையும் மீறி, டென்னிஸ் களத்திற்கு திரும்ப கடுமையாக முயற்சித்தேன். ஆனால் என்னுடைய உடல் ஒத்துழைக்கவல்லை. என்னுடைய உடல் எவ்வளவு தாங்கும் என்ற எல்லை எனக்கு தெரியும். அதனால் தான் இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். டென்னிஸ் என் வாழ்க்கையில் நினைக்காதது எல்லாம் கொடுத்து இருக்கிறது.

நல்ல நண்பர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் கொடுத்தது இந்த டென்னிஸ் தான். என் வாழ்க்கை பயணத்தில் என்னுடன் இருக்கும் மனைவி மிர்கா மற்றும் என் குழந்தைகளுக்கு நன்றி. சிறு வயதில் டென்னிஸ் பந்தை எடுத்து கொடுக்கும் பால் பாய் ஆக என்னுடைய பயணத்தை தொடங்கினேன். டென்னிஸ் மீதான ஆர்வத்தால் கடுமையாக உழைத்தேன்.


உழைப்பின் பயனாக எனக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி பல சாதனைகளை படைக்கும் உத்வேகத்தை கொடுத்தது. என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டேன் போன்ற ஒரு மனநிலை கொடுத்து இருக்கிறது. சிரிப்பு, அழுகை, வெற்றி, தோல்வி என அனைத்தையும் இந்த டென்னிஸ் கொடுத்திருக்கிறது. 40 நாடுகளில் விளையாடியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். டென்னிஸ் நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

From around the web