டி20 உலகக்கோப்பை போட்டி: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!!

 
India

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி அரையிறுதிகுள் நுழைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் குரூப்1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

Netherlands

சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நெதர்லாந்தின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா ரன் எடுக்க முடியாமலும், விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தும் தடுமாறியது. 

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

SAF-NLD

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. 

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இறுதிப்போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web