சுப்மான் கில்லின் இரட்டை சதம்... நியூசிலாந்துக்கு 350 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

 
Shubham Gill

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாட வருகிறது. இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று (ஜன. 18) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.

Shubham Gill

இதையடுத்து ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கினர். இருவரும் இந்திய அணிக்கு நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். இந்திய அணி 60 ரன்களில் இருந்த போது ரோகித் சர்மா டிக்னர் பந்து வீச்சில் டேரில் மிட்ச்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார்.

அடுத்து வந்த விராட் கோலி 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில், சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கேப்டன் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின்னர் இணைந்த சுப்மன் கில் – சூர்யகுமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது. சூரியகுமார் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை ஒரு பக்கம் சரிந்தாலும், ஓபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்தார். 87 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் கில் இந்த சதத்தை விளாசினார்.

Shubham Gill

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும், மறுமுனையில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். 149 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 சிக்சர், 19 பவுண்டரியுடன் 208 ரன்களை குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்களை எடுத்தது. இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

From around the web