ரோகித் அதிரடி.. தினேஷ் கார்த்திக் தரமான ஃபினிஷிங்! இந்தியா அபார வெற்றி!!

 
Rohit Sharma

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிலையில், நேற்று நாக்பூரில் 2வது போட்டி நடைபெற்றது.


மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் இரண்டரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு தொடங்கப்பட்டது. அதனால்  8 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.

India

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேத்தீவ் வேட் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் ஆரோன் பின்ச் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.


இதைத் தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- கேஎல் ராகுல் இறங்கினர். ஒருமுனையில் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழை பொழிந்தார். ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ரோகித் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில் ஜாம்பா பந்துவீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதற்கு அடுத்த பந்திலே சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 9 ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

Rohit Sharma


அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரோகித் சர்மா அதிரடியை குறைக்கவில்லை. இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, களத்தில் ரோகித் - தினேஷ் கார்த்திக் ஜோடி இருந்தனர். முதல் பந்தில் சிக்சர் விளாசிய கார்த்திக், அடுத்த பந்தை பவுண்டரி விரட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அசத்தினார். 

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் சமநிலை வகிக்கின்றன.

From around the web