கவுண்டி கிரிக்கெட்டில் 118 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்த புஜாரா!!

 
Pujara

118 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கவுண்டி சீசனில் 3 இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் புஜாரா.

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் முக்கியமான தூணாகவும் திகழ்ந்தவர் புஜாரா. இந்தியாவிற்காக 96 டெஸ்ட்களில் 43.82 சராசரியுடன், 18 சதங்கள் உட்பட 6792 ரன்களை குவித்துள்ளார்.

Pujara

இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த புஜாரா, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவந்தார். பார்ம் அவுட்டில் தவித்த அவருக்கு இந்திய அணியிலும் கேள்விக்குறியான நிலையில் கவுண்டி கிரிக்கெட் விளையாடும் முடிவை எடுத்தார்.

கவுண்டி கிரிக்கெட்டில் தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்து இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவரின் இந்த முடிவு சரியாகவும் அமைந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த அவர், அந்த தொடர் முடிவடைந்ததும் கவுண்டி கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்.


சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், பந்துவீச்சாளராகவும் அவதாரம் எடுத்தார். தற்போது நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் இருக்கும் சசெக்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மிடில் சசெக்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். 368 பந்துகளை (498 நிமிடங்கள்) எதிர்கொண்ட அவர், இரட்டை சதம் விளாசி அசத்தினார். இதில் 19 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். 

இந்த இரட்டை சதம் மூலம் 118 ஆண்டுகால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் இரட்டை சதங்கள் அடித்த முதல் சசெக்ஸ் வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இந்த சீசனில் மட்டும் ஏழு கவுண்டி ஆட்டங்களில் விளையாடி 5வது சதத்தை அடித்திருக்கிறார். 

From around the web