கடைசி ஓவரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி!!

 
Pakistan

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

Kholi

அந்த வகையில், துபாயில் இன்று நடைபெற்ற சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இருவரும் தலா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய விராட் கோலி பொறுப்புடன் விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு இணையாக அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தனி ஆளாக விராட் கோலி போராடினார். அரைசதம் கடந்த அவர் 60 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்.

Pakistan

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர், முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நவாஸ் 42 ரன்னிலும் ரிஸ்வான் 71 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.

From around the web