காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Neeraj-chopra

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

Neeraj

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றது.

ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் போது காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. ஆகவே அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா இன்று தெரிவித்தார்.

Neeraj

ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி விளையாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web