உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா!!

 
Indian-hockey

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் - ரூர்கேலாவில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஆடவருக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

Indian-hockey

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

முதல் நாளான இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவையும், ஆஸ்திரேலிய அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் வேல்சையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் இந்திய அணியும், ஸ்பெயின் அணியும் மோதின.

Indian-hockey

இதில் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய அணியின் ரோகிதாஸ் அமித் முதல் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஹார்டிக் சிங் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஸ்பெயின் அணியினர் கோல அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் இந்திய அணியினர் அருமையாக தடுத்தனர். இதனால் ஸ்பெயின் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

From around the web