வெறித்தன பவுலிங்... தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முகமது சிராஜ்!!

 
Siraj

ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது.

Siraj

இந்த தொடர முடிவடைந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், உலகின் மிகச்சிறந்த பவுலர்களாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசல்வுட், நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த ஓராண்டாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவருக்கு முதலிடத்தை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கௌரவித்துள்ளது.

ஐசிசி தரவரிசை பட்டியலில் 729 புள்ளிகளுடன் சிராஜ் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசல்வுட் 2வது இடத்திலும்,708 புள்ளிகளுடன் ட்ரென்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர். நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சிராஜ் 9 விக்கெட்டுகளை எடுத்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Siraj

பந்துவீச்சாளர்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்தில், சிராஜை தவிர்த்து இந்திய அணி வீரர்கள் யாரும் இல்லை. 20 ஆவது இடத்தில் 594 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் உள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 569 புள்ளிகளுடன் 24 ஆவது இடத்தில் உள்ளார். ஷமி 3 இடங்கள் பின்னுக்கு சென்று 32 இடத்தில் இருக்கிறார். ஷர்துல் தாகூருக்கு 35 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web