காமன்வெல்த்: மல்யுத்த போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றது!!

 
Deepak-punia

இன்று ஒரே நாளில் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் முன்னதாக நடைபெற்ற கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகளில் இந்தியாவின் தீபக் புனியா (ஆண்கள் 86 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு ), சாக்சி மாலிக் (பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு), அன்ஷு மாலிக் (பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு) மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

bajrang-punia

இதை தொடர்ந்து இறுதி போட்டிகள் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

இதை தொடர்ந்து ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் புனியா கனடா வீரர் மெக்நீல் உடன் மோதினார். இந்த போட்டியில் பஜ்ரங் 9-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் நடைபெற்ற பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சாக்சி மாலிக் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் 8-வது தங்க பதக்கத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

sakshi-malik

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த மற்றொரு தீபக் புனியா இந்தியாவுக்கு 9-வது தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார். ஆடவருக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமைத்தை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

From around the web