சென்னை ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்

 
Linda

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும், தமிழ்நாடு அரசும் இணைந்து, தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தும் இத்தொடர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் என முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

Chennai

இதனையடுத்து ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 130-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, 298-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்கோவை 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 64-வது இடத்தில் இருக்கும் போலந்து வீராங்கனை மேக்டா லினெட், 174-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை கேட்டி ஸ்வானுடன் மோதினார். இதில் முதல் செட்டில் மேக்டா லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது உடல் நலம் பாதிப்பு காரணமாக கேட்டி ஸ்வான் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் மேக்டா லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Linda

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

From around the web