ஷமி அபார பந்துவீச்சு... நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

 
Ind vs NZ

உலகக்கோப்பை முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

Ind vs NZ

அதிரடியாக விளையாடி சதமடித்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முறையே 117 ரன்கள் மற்றும் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில் மீண்டும் களமிறங்கினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 39 ரன்களுடனும் சுப்மன் கில் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கனே வில்லியம்சன் 69 ரன்களில் வெளியேறினார். அந்த அணியின் டேரைல் மிட்செல் அதிக அளவாக 134 ரன்களை சேர்த்துள்ளார். அவற்றில் 7 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும்.

Ind vs NZ

கிளென் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்துள்ளார். அவரை தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்தியாவின் வெற்றியால், நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில், பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web