வீரகனூர் மயானக் கொள்ளை விழா.. குழந்தை வரம் கேட்டு ‘ரத்தச் சோறு’ சாப்பிட்ட பெண்கள்!

 
Salem

வீரகனுாரில் நடந்த மயானக் கொள்ளை விழாவில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை வரம் கேட்டு ‘ரத்த சோறு’ சாப்பிட்டு வழிபட்டனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 4கு ஆண்டுகளுக்கு பின் கடந்த 8-ம் தேதி மயானக் கொள்ளை விழாவையொட்டி பால் குடம் ஊர்வலத்துடன் விழா துவங்கியது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு காடு வளைப்பு, காளி புறப்பாடு, வள்ளாளராஜன் கோட்டை இடித்து, மயான சூறை இடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீரபத்திர சுவாமி, பாவடைராயன் சுவாமிகள் புஷ்ப தேர் அலங்காரத்தில், சுவேத நதிக்கு கொண்டு சென்றனர்.

Salem

தொடர்ந்து, சுவேத நதி மண்ணில் பெரியாண்டிச்சி அம்மன் சுவாமி உருவம் வடிவமைத்து, 10-க்கும் மேற்பட்ட ‘கிடா’, 20-க்கும் மேற்பட்ட கோழிகளை பலி கொடுத்தனர். தானியங்கள் கலந்து பொங்கல் வைத்து எடுத்து வந்த சாப்பாட்டில் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை விட்டனர்.

காளி உருவம் அணிந்தும், பூசாரி பூங்கரகம் எடுத்து வந்தபின், மயான கொள்ளை விழா நடந்தது. ரத்தம் கலந்த சாப்பாட்டை குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசாதமாக வழங்கினர். அதேபோல், தீராத நோய்கள், பல்வேறு பிரச்னைகளில் உள்ளவர்களுக்கு ரத்த சாப்பாடு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ரத்தம் கலந்த சாப்பாட்டை வீசியபோது, பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். வேடமிட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட பருவதராஜ குல மீனவர்கள், நேர்த்திக் கடனாக வழங்கிய 100-க்கும் மேற்பட்ட ஆடு, 200-க்கும் மேற்பட்ட கோழிகளின் கழுத்தை கடித்து ரத்தத்தை ‘ருசி’ பார்த்தபடி ஊர்வலமாக வந்தனர். இந்த விழாவில், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனுார் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

From around the web