காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. வரும் 15-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், வரும் 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டனர். பக்தர்களின் பாவசுமையால் கருமை நிறமடைந்த நதிகள் அனைத்தும் தங்கள் பாவசுமைகளை போக்கிக் கொள்ள சிவபெருமானை வேண்டியபோது, நதிகள் அனைத்தும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.
எனவே, காசிக்கு நிகராக மயிலாடுதுறை போற்றப்படுகிறது. நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்களின் பாவசுமைகளை போக்கி கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 23-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.