வருகிற 23-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Madurai

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி வருகிற 23-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. அதனைத் தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும். மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா வருகிற 23-ம் தேதி வரை நடக்கிறது. 

விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 21-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி - அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர். 22-ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

Madurai

சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி - அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்.

மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது. 21-ம் தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார். 22-ம் தேதி புதூரில் எதிர்சேவையும், 23-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது. 

Local-holiday

இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி ஏப்ரல் 23-ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதிக்கு பதிலாக மே 11-ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

From around the web