புரட்டாசி மகாளய அமாவாசை.. ராமேஸ்வரத்தில் நள்ளிரவில் இருந்து வழிபாடு!
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திதி, தர்ப்பணம் கொடுக்க நள்ளிரவில் இருந்து பக்தர்கள் வாழிபாடு செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தங்களுடைய பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்பது ஜதீகமாக உள்ளது. இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நேற்று முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரத்தொடங்கினர். நள்ளிரவில் இருந்தே தங்களுடைய பித்ருக்களுக்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் திதி, தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராட தொடங்கினர்.
இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் தீர்த்தம் திறக்கப்பட்டு, கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து கிழக்கு கோபுர வாசல் வரை வரிசையில் நின்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து 22 புனித தீர்த்தங்களில் நீராடிவிட்டு, பின்பு ஒருமணி நேரத்திற்கு மேலாக நின்று ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாளையும் வழிபட்டு வருகின்றனர்.
அளவுக்கதிகமாக வாகனங்கள் ராமேஸ்வரம் பகுதியில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவில் இருந்து மழைபெய்ததால் மின்வெட்டால் ஏற்பட்டு இருளில் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்தனர், உணவகங்கள், தேநீர் விடுதிகள், தங்கும் விடுதிகள் மின்வெட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.