திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு.. 10 நாட்கள் திறந்திருக்கும்.. வெளியான முக்கிய தகவல்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1 வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே அதிக மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்யும் கோவில் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். நாள்தோறும் பல பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் பிரவேசத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளது.
ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டிக்கெட் என 10 நாட்களுக்கு சேர்த்து 5 லட்சம் டிக்கெட் வழங்கப்பட உள்ளது. ஆதார் அட்டை நகல்களை சமர்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.