மணப்பாடு திருச்சிலுவை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 
Manapadu

மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மகிமை பெருந்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரை ஓரத்தில் மணல் குன்றின் மீது திருச்சிலுவை நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 444-வது ஆண்டு மகிமை பெருந்திருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இதை முன்னிட்டு ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. விழாவுக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் வழங்கி, மறையுறை நிகழ்த்தி அனைவருக்கும் அப்பம் வழங்கினார்.

இந்த பெருந்திருவிழாவில் திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்னை மரியாள் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Manapadu

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு விழாவுக்கு வருகை தரும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலையில் பெரும் விழா மற்றும் மாலை ஆராதனை சிறப்பு மறையுறை நடக்கிறது.

வருகிற 14-ம் தேதி மகிமை பெருந்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, காலை 5 மணிக்கு மலையாள திருப்பலி, 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி வந்து, மகிமை பெருந்திருவிழா நிகழ்ச்சியை புதியசபையினர் தேர்வு செய்தல், மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Manapadu

இத்திருவிழாவின் முக்கிய நாட்களில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கிறிஸ்தவர்கள் வந்து, செல்ல அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை மணப்பாடு புனித யாகப்பர் பங்குத் தந்தையர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

From around the web