குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலத்தில் பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. குணசீல மஹரிஷியின் தவத்திற்காக ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதியாக காட்சியளித்த அற்புதத் தலம். முக்கியமாக மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாள்கள் விரத முறைப்படி வணங்கினால் அவ்வினைகள் யாவையும் பரம கருணையினாலே போக்கி அருள் புரிகின்றார் என்பது ஐதீகம்.
மேலும் திருப்பதிக்கு சென்று தங்களது பிராத்தனைகளை செலுத்த இயலாதவர்களும், அந்த பிராத்தனைகளை பெருமானிடத்தில் செலுத்தி சுகம் பெறுகின்றனர். ஆகையால், தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலத்தில் பிரம்மோத்ஸவ விழாவானது செப்டம்பர் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, ஒவ்வொரு சேஷ வாகனம், அன்ன, சிம்ம, அனுமந்த, கருட, யானை, வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. செப்டம்பர் 24-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், செப்டம்பர் 25-ம் தேதி குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.30க்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு 9.30 க்கு தேர் நிலையை அடைந்தது.
தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து எழுத்தனர். மேலும், வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் பக்தர்கள் தேர் பின்பு அங்கபிரதட்சணை செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இத்தேர் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகி டி கே.ஆர். பிச்சுமணி மற்றும் விழாக் குழுவினர் செய்து இருந்தனர். போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.