திருப்பதிக்கு ஜனவரி 1-ம் தேதி வரை வராதீர்கள்.. பக்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தேவஸ்தானம்!

 
Tirupati Tirupati

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலவச டோக்கன்கள் மற்றும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் ஜனவரி 1-ம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகத்திலேயே அதிக மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்யும் கோவில் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். நாள்தோறும் பல பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திருமலை ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் தரிசனம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதையொட்டி, டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 24-ம் தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tirupati

வைகுண்ட வாசல் 10 நாட்கள் தரிசனத்தை முன்னிட்டு டிசம்பர் 22 முதல் 24, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 வரை ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சகஸ்ர தீபாலங்கார சேவை பக்தர்களின்றி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் விஐபிக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் வரை விஐபி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது.

Tirupati

இந்த நிலையில் ஜனவரி 1-ம் தேதி வரையிலான அனைத்து டோக்கன்களும் நேற்று அதிகாலை 4.30 மணி வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் கவுன்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. இனி இலவச டோக்கன்கள் வழங்கப்படாது எனவும், டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்துக்கு வர வேண்டும். டோக்கன்கள் இன்றி திருப்பதிக்கு வந்தால் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web