திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா.. நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

 
Tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நிகழாண்டு ஆவணித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

பின்னர் கொடிபட்டம் கோவிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளுக்கும் வீதிஉலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை 5.20 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் சண்முகம் பட்டர் கொடியேற்றினார்.

Tiruchendur

பின்னர் கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், திரவிய பொடி, மஞ்சப்பொடி, மாபொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமர பீடம் தர்ப்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு சோடாச தீபாராதனை நடந்தது. தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், கோவில் இணை ஆணையர் கார்த்திக், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், ஓய்வு பெற்ற திட்ட இயக்குனர் விஜயகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய திருநாட்களான 5-ம் திருநாளான 8-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 10-ம் தேதி மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு நிற பட்டு உடுத்தி, சிவன் அம்சமாக தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

Tiruchendur

அதேபோல் 8-ம் திருநாள் அதிகாலையில் சுவாமி வெண்பட்டு அணிந்து பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அன்று பகலில் பச்சை நிற பட்டு உடுத்தி பெருமாள் அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10-ம் திருநாளான 13-ம் தேதி (புதன்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

From around the web