மாங்கல்ய தோஷத்தால் திருமணம் தடையா? தோஷம் நீங்க பரிகாரங்கள்... செல்ல வேண்டிய கோவில்கள்!!

 
Mangalya dosham

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் இன்றியமையாதது. ஆண், பெண் இருபாலருக்கும் குறிப்பிட்ட பருவ வயதை அடைந்த பிறகு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டுமல்ல, இயற்கைச் சட்டமும் கூட. திருமண வாழ்க்கை சிலருக்கு எளிதாக அமையும். சிலருக்கு மிகுந்த முயற்சிக்குப் பிறகு கிடைக்கும். சிலருக்கு கிரக தோஷ அமைப்பால் தடைகள், அலைச்சல்கள் ஏற்படும். திருமண காரியம் என்றவுடன் முதலில் பார்ப்பது ஜாதகம் தான்.

ஜாதகத்தில் உள்ள பொருத்தங்களை வைத்து திருமணம் செய்யப்படுகிறது. திருமணத்தைப் பொறுத்தவரை ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு. கிரகங்களின் சேர்க்கைகள் கோச்சார நிலை மேலும் சில வகையான தோஷங்கள் காரணமாக திருமணம் தாமதப்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பாக கூறப்படுவது மாங்கல்ய தோஷம் ஆகும்.

தோஷத்தின் காரணமாக தாமதமாகும் திருமணத்திற்கு ஜோதிட சாஸ்திரம் பல பரிகாரங்களை வகுத்துள்ளது. மாங்கல்ய தோஷம் என்பது பொதுவாக பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படுகிறது. மாங்கல்ய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் இரண்டுமே ஜாதகத்தில் எட்டாம் பாவகம் ஆகும்.

Mangalya dosham

இந்த எட்டாம் இடத்தில் ராகு, கேது, சூரியன், செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷம் ஆகும். இதுவே திருமண தடையை மிகைப்படுத்துவதாக கூறப்படுகிறது. நீச, அஸ்தங்கம் போன்ற போன்ற கிரகங்கள் எட்டாம் இடத்தில் அமர்வதால் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது.

மாங்கல்ய தோஷ பரிகாரங்கள்

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் அன்று மனம் உருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு மாங்கல்யத்திற்கு ஆபத்து வருமா என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்குச் சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சக்கரை பொங்கல், பால் பாயசம், பானகம் நிவேதனம் செய்து சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து பைரவரை வழிபட வேண்டும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜை செய்தல் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

Mangalya dosham

அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம், எலுமிச்சை அன்னம் படைத்து வழிபாடு செய்வது தோஷ நிவர்த்திக்குச் சிறப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.

எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டுள்ளது என அறிந்து அந்த கிரகத்திற்குப் பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

மாங்கல்ய தோஷத்திற்குச் செல்ல வேண்டிய கோயில்கள்

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்கள நாதர் திருக்கோவில், மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் உள்ள பிரளய நாதர் திருக்கோவில், கெங்கமுத்து பாலமேடு நாகம்மாள் திருக்கோவில், தேவி கருமாரியம்மன் திருக்கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்யாண ராமர் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசலில் வீற்றிருக்கும் வல்லப விநாயகர் திருக்கோவில், திண்டுக்கல் மாவட்டத்தில் சிரஞ்சீவியாக வீற்றிருக்கும் அபய வரத ஆஞ்சநேயர் கோவில், சாத்தூரில் உள்ள ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபட்டால் எப்படிப்பட்ட மாங்கல்ய தோஷமாக இருந்தாலும் அது விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

From around the web