திருச்சானுர் பிரம்மோற்சவம்.. 5-ம் நாளில் லட்சுமி கடாட்சமாக கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா!

 
tiruchanur

திருச்சானூர் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாளான நேற்று காலையில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அந்த வகையில் விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் ‘மோகினி’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

tiruchanur

அதைத்தொடர்ந்து கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, உதவி அதிகாரி ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

tiruchanur

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று, வெண்ணெய் குடங்களுடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

From around the web