தர்பார்… இதோ ரஜினியின் அட்டகாச அறிமுகக் காட்சி! – எக்ஸ்க்ளூசிவ்

ஒரு பரபரப்பான சாலை. காலை ஏழு மணி என்பதை சாலையின் நடுவே இருக்கும் மணிக்கூண்டு காட்டுகிறது. வாகனங்கள் சென்று, வந்து கொண்டு இருக்கின்றன. வாகனங்களின் இரைச்சல் தவிர வேறு எந்த சப்தமும் இல்லாத அந்த அமைதியான காலை வேளையில் சாலையில், விலை உயர்ந்த கருப்பு கார் ஒன்று மிக வேகமாக வருகிறது. திடீரென்று பிரேக் போட்டு நிற்கிறது. சாலையோரம் பிளாட்பாரத்தில் பூ விற்று கொண்டிருக்கும் பெண் அதிர்ச்சியாகி பார்க்கிறாள். அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்னே இருந்த அந்த
 

ரு பரபரப்பான சாலை. காலை ஏழு மணி என்பதை சாலையின் நடுவே இருக்கும் மணிக்கூண்டு காட்டுகிறது. வாகனங்கள் சென்று, வந்து கொண்டு இருக்கின்றன. வாகனங்களின் இரைச்சல் தவிர வேறு எந்த சப்தமும் இல்லாத அந்த அமைதியான காலை வேளையில் சாலையில், விலை உயர்ந்த கருப்பு கார் ஒன்று மிக வேகமாக வருகிறது. திடீரென்று பிரேக் போட்டு நிற்கிறது. சாலையோரம் பிளாட்பாரத்தில் பூ விற்று கொண்டிருக்கும் பெண் அதிர்ச்சியாகி பார்க்கிறாள். அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்னே இருந்த அந்த டீ ஸ்டாலில் டீ போடுபவன் வேலையை மறந்து அதிர்ச்சியாய் பார்க்கிறான். வண்டியில் காய்கறி விற்பவன் கையில் பிடித்திருந்த தராசுடனே பார்க்கிறான். அதே போல் பழக்கடை வைத்திருப்பவன் கையில் இருந்த ஆப்பிளை துடைத்த படி பார்க்கிறான். சாலையில் நடந்து, சைக்கிளில், பைக்கில் செல்பவர்களும் ஒரு கணம் திரும்பி அந்த காரைப் பார்க்கிறார்கள். அங்கிருந்த அத்தனை பேரின் கவனத்தை ஈர்த்த அந்த காரிலிருந்து யாரும் இறங்கவில்லை. முழுவதும் கருப்புக் கண்ணாடி ஏற்றப்பட்டிருந்ததால் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

சில விநாடிகள் மௌனமாய் நகர்கிறது. இப்போது சாலையில் ஒரு சைக்கிள் வருகிறது. யோகி பாபு சைக்கிளை மிதித்து கொண்டுவர சைக்கிளின் பின்னே ரஜினி இரு புறமும் கால்களை போட்ட படி அமர்ந்து வருகிறார். “ஏய் ஏய் நிறுத்து நிறுத்து,” என்கிறார் ரஜினி.

டீ கடையின் முன்பாக சைக்கிள் நிற்கிறது.

யோகி பாபு இறங்கி மூச்சிரைக்க சொல்கிறார்.

“ஏன்பா… அம்மாம் பெரிய பைக்க வீட்ல வச்சிட்டு என்னை போய் சைக்கிள் மிதிச்சிட்டு வர சொல்றியே இது நியாயமா?”

“இம்மாம் பெரிய உடம்பை வச்சிகிட்டு சைக்கிள் மிதிக்க மாட்டேனு நீ சொல்றியே. இது நியாயமா?”

“எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிருக்க”

“தலைவா… ரெண்டு டீ…” டீ மாஸ்டரிடம் சொல்லிவிட்டு கடை பெஞ்சில் அமரும் ரஜினி அன்றைய பேப்பரை பிரிக்கிறார்.

“இத்தனை கடை இருக்கு. எலலத்தையும் விட்டுட்டு இந்த கடைக்கு டீ குடிக்கிறேனு வர்றாரே. அப்படி என்னத்தையா ஊர்ல இல்லாத டீ போடறீங்க” என்றபடி கடைக்குள் நுழையும் யோகிபாபு,

“சூடா சமோசா போட்டிருக்கான் சாப்பிடறியா…” என்கிறார்.

வேண்டாம் என்று தலையாட்டுகிறார் ரஜினி.

ஒரு சமோசாவை எடுத்து யோகிபாபு வாயில் வைக்க போகும் தருவாயில் அந்த கருப்பு கார் கதவுகள் திடீரென்று திறக்கிறது. ரஜினி பேப்பரை பார்த்து கொண்டே ஓர கண்ணால் அதை கவனிக்கிறார். ஜிம் பாய் போல் ஒருவன் இறங்குகிறான்.கூடவே ஒவ்வொருவராக இறங்குகிறார்கள்.ஒவ்வொருவரும் ஜிம் பாய் போல் தான் இருக்கிறார்கள்.

யோகி பாபு, “ஒரு கார்லருந்து எத்தனை பேர்டா இறங்குவீங்க,” என்கிறார்.

இறங்கியவர்கள் மொத்தம் 8 பேர். அடுத்த நொடி ரஜினியை நோக்கி வேகமாக பாய்ந்தோடி வருபவர்கள் அவரை சுற்றி வளைக்கிறார்கள்.

மிரளும் யோகி பாபு, “என்னங்கடா சூரியனை சுத்தற கிரகங்க மாதிரி சுத்தி நிக்கறீங்க.”

“டேய். டம்மி பீஸூ சும்மாரு…” ஒருவன் அதட்டுகிறான்.

“என்னது டம்மி பீஸா,” முனகும் யோகி பாபுவுக்கு கோபம் வருகிறது. ஆனாலும் அவர்கள் கையில் முளைத்த ஆயுதங்கள் பார்த்து விட்டு மிரள்கிறார். ஆனால் ரஜினியோ இவை அனைத்தையும் கண்டும் காணாதது போல் தன்னை சுற்றி எதுவுமே நடக்காதது போல் பேப்பர் படித்து கொண்டிருக்கிறார்.

“பிரபல தாதா தப்பி ஓட்டம். அவரையும் அவரது கும்பலையும் பிடிக்க போலீசார்” தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.” என்று வாய் விட்டு தலைப்பு செய்தியைப் படிக்கும் ரஜினியை,

“ஏன்பா உன்ன சுத்தி இத்தனை பேரு ரவுண்டு கட்டி நிக்கிறானுங்க. நீபாட்டுக்கு பேப்பர் படிச்சிட்டிருக்கே…” என்கிறார் யோகிபாபு.

பேப்பரின் அடுத்த பக்கத்தை புரட்டிய படி “எதுக்கு வந்திருக்காங்கனு கேளு,” என்கிறார் ரஜினி.

“டேய் எதுக்குடா வந்திருக்கீங்க” யோகிபாபு தைரியம் பெற்று அதட்ட,
ஒருவன் துப்பாக்கியை யோகிபாபு பக்கம் திருப்பி காண்பிக்க ,அவர் வாயை மூடி கொள்கிறார்.

“என்ன கேட்டியா”

“நான் கேட்டதுக்கு துப்பாக்கியை என் பக்கம் திருப்பறான். நீ கேளு உன் பக்கம் என்னத்தை திருப்பறான்னு பார்ப்போம்”

ரஜினி பேப்பரிலிருந்து நிமிர்ந்து,

“என்னப்பா வேணும் உங்களுக்கு,” என்கிறார்.

இதை கேட்டு ஒருவன் ரஜினியின் முகத்தருகே துப்பாக்கியை பிடித்து “நீ எதுக்கு இங்க வந்திருக்கே. அதை சொல்லு” என்கிறான் பல்லை கடித்தபடி.

“டீ சாப்பிட…” ரஜினி சிரித்தபடி பவ்யமாய் பதிலளிக்கிறார்.

“பொய். எங்களை வேவு பார்க்கத்தானே வந்திருக்கே”

“இல்லப்பா டீ சாப்பிட வந்தேன்”

“இல்ல நீ இங்க சம்பவம் பண்ண வந்திருக்கே.”

“என்னது சமோசா பண்ண வந்திருக்காரா. யோவ் அல்ரெடி அது போட்டு ரெடியா இருக்குயா இங்க” இப்படி சொன்ன யோகி பாபுவை ஒருவன் பளாரென்று அறைந்து கீழே தள்ளி அவர் முதுகில் தன் பூட்ஸ் காலால் அழுத்தி அவரது கையை பிடித்தும் முறுக்குகிறான்.

“யப்பா நீ பேப்பரை அப்புறமா படி. முதல்ல இவனுங்களை கவனி.டேய் கைடா …. கைடா” யோகிபாபு அலற ஆரம்பிக்கிறார்.

பேப்பரை மடித்து டேபிளில் போடும் ரஜினி “டீ என்னாச்சு” என்ற படி எழுந்து சோம்பல் முறிக்கிறார். டீ மாஸ்டர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு “இதோ” என்ற படி டீ போட ஆயத்தமாகிறார்.
டீ கடைக்காரர் நடப்பவற்றை அதிர்ச்சியாய் பார்க்க, “உங்க கடைக்கு ஒரு டேமேஜூம் ஆகாது. அதுக்கு நான் கியாரண்டி. ஆனால் இவங்களுக்கு நான் கேரண்டி கொடுக்க முடியாது,” – ரஜினி.

துப்பாக்கியை நீட்டியவன் இப்போது ரஜினியின் கன்னத்தில் துப்பாக்கியால் அடிக்கிறான். “சொல்லு எதுக்கு வந்திருக்கே”

கன்னத்தை தடவி கொள்ளும் ரஜினி,

“டீ சாப்பிட வந்திருக்கேனு சொல்லிட்டிருக்கேன். திரும்ப திரும்ப அதையே கேட்கிறே” என்று அவன் கையை சடாரென்று பிடித்து துப்பாக்கியை தட்டி தன் இடது கையில் வாங்கி கொண்டு வலது கையால் அவன் கையை முறுக்கி முதுகில் ஒன்று வைக்கிறார். கூடவே யோகி பாபுவை பிடித்திருந்தவனை தன் தோள்களால் மோதி அவனை தள்ளி விட்டு, யோகி பாபுவை கை கொடுத்து தூக்கி விடுகிறார்.
யோகி பாபு உடம்பை அப்படி இப்படி அசைத்த படி, “நானும் வந்திதேலேருந்து பாத்துகிட்டிருக்கேன். என்னமோ உன் கிட்டே துப்பாக்கியை காண்பிச்ச மாதிரி நீ மிரண்டு போய் நிக்கிறே,” டீ மாஸ்டரை பார்த்து சொல்கிறார்.

இப்போது எல்லாரும் சேர்ந்து ரஜினியை மொய்க்க அங்கே அனல் பறக்கும் சண்டை ஆரம்பமாகிறது. எல்லாரையும் அடித்து கீழே வீழ்த்தி விட்டு டீ கடைக்காரரை பார்த்து கண்ணடிக்கும் ரஜினி,
“உன் கடைக்கு ஒண்ணும் சேதாரம் இல்லாம முடிச்சிட்டேன்,” என்கிறார்.

“அவ்ளோதானா இன்னும் எவனாவது இருக்கானாப்பா” யோகி பாபு.

இன்னும் ஒரே ஒருத்தன் பாக்கி இருக்கான்” என்கிறார் ரஜினி.

“பயந்துட்டு கார்ல ஒளிஞ்சிருக்கான் போல. இப்ப இறங்குவான் பாரு,” என்றபடி யோகிபாபு காரை நோக்கி ஒரு கல்லை விட்டெறிய, அவரை சொடக்கு போட்டு தன் பக்கம் திருப்பும் ரஜினி “அவன் முட்டாள் இல்லே. புத்திசாலி. அங்கலாம் உட்கார மாட்டான்” என்கிறார்.

“உன்னை எதிர்க்கிறவங்களையும் பாராட்டறதுக்கு ஒரு மனசு வேணும். அது உன் கிட்டே இருக்கு” என்கிறார் யோகி பாபு.

“ஹா.ஹா. பாராட்டுவேன்” என்று இழுக்கும் ரஜினி, “ஆனா முதுகுல குத்தணும்னு நினைச்சா மட்டும் விட மாட்டேன் என்று சொல்லிய படி அதிரடியாக திரும்ப, டீ கடையில் கல்லாவில் அமர்ந்திருக்கும் டீ கடைக்காரர் இப்போது வெளியே துப்பாக்கியுடன் எகிறி ரஜினியை நோக்கி பாய, யோகி பாபு மிரள
இவையெல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்தேறுகிறது. அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத வண்ணம் கண்ணிமைக்கும் நேரத்தில் ரஜினியின் கைகளில் பிஸ்டல் வர, அவனைச் சுடுகிறார். ரஜினியை நோக்கி எகிறி வரும் அவன் அந்தரத்திலேயே தோட்டாவை வாங்கிய படி கீழே சரிகிறான்.

யோகிபாபு “என்னப்பா கடைக்காரனையே சுட்டுட்டே” என்கிறார் மிரண்டு போய்.

“வந்ததே அதுக்குதாண்டா” சிடுசிடுக்கும் ரஜினி, இப்போது விசிலடிக்க மாறுவேடத்தில் மறைந்திருந்த பூ விற்பவள், பழக்கடைக்காரர், காய்கறி விற்பவர் அனைவரும் துப்பாக்கிகளுடன் ஓடி வருகிறார்கள். ரஜினிக்கு சல்யூட் அடித்த படி கீழே விழுந்திருந்த அடியாட்களையும் சுடப்பட்டு வீழ்ந்தவனையும் மொய்க்கிறார்கள்.

“சீ சீ சீ. என்னப்பா. இங்க ஒரே சண்டை களேபரம் னு இருக்கு. நீ வா. நாம அடுத்த கடைக்கு போய் டீ சாப்பிடுவோம் ” என்ற படி ரஜினி சைக்கிளை எடுத்து ஸ்டைலாக ஏறி அமர, யோகிபாபு ரஜினியை முறைத்த படி டீ கடை பக்கம் திரும்பி ” டீ கேன்சல்” என்று சொல்லி விட்டு சைக்கிளின் பின்னே ஏறி அமர்கிறார்.

சாலையில் கூட்டம் கூடுகிறது. “என்னங்க டீ சாப்பிட வந்த மாதிரி வந்தாரு. இப்படி சுட்டு போட்டுட்டு போய்கிட்டே இருக்கார். நீங்களும் விட்டுட்டு நிக்கறீங்க. யாருங்க அவரு” என்கிறார் ஒருவர்.

“என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் தர்மா” என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. அனிருத் பி ஜி எம் ஒலிக்க படத்தின் டைட்டில் வருகிறது.

(எப்படி இருக்கிறது இந்த அறிமுகக் காட்சி? ஆனால் இது படத்தில் வரும் முருகதாஸின் கற்பனை அல்ல… ரஜினி ரசிகரும் வளரும் எழுத்தாளருமான ஆர்வி சரவணன் கற்பனையில் உதித்தது… உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!)

– ஆர்.வி.சரவணன்

kmrvsaravanan@gmail.com 

From around the web