சேரன் vs சரவணன் அண்ட் பிக்பாஸ்! – கவிஞர் மகுடேசுவரன்

பெருந்திரளான மக்களின் பார்வைக்குச் செல்கின்ற ஒன்றினைப் பற்றிய தீண்டாமையை நான் எப்போதும் கடைப்பிடித்ததில்லை. அதனை ஊன்றிக் காண வேண்டும். வாழ்க்கை நிலைகளின் ஏற்றத்தாழ்வு ஒருவரை எப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்று பழைய கதைகளின் தொடர்ச்சியோடு விளங்கிக்கொண்டேன். மேலும் சொல்வதற்கும் வண்டியளவுச் செய்திகள் உள்ளமையால் இங்ஙனம் துணிந்து எழுதுகிறேன். முதலில் சரவணனை எடுத்துக்கொள்வோம். அவர் சேலத்துக்காரர். நடிப்புக் கல்லூரியில் பயின்றவர். அவர் அறிமுகமானது ‘வைதேகி வந்தாச்சு’ என்ற திரைப்படத்தில்தான். அந்தப் படத்தினைப் பற்றிக் கூறியே தீரவேண்டும். வைதேகி வந்தாச்சு
 

சேரன் vs சரவணன் அண்ட் பிக்பாஸ்! – கவிஞர் மகுடேசுவரன்
பெருந்திரளான மக்களின் பார்வைக்குச் செல்கின்ற ஒன்றினைப் பற்றிய தீண்டாமையை நான் எப்போதும் கடைப்பிடித்ததில்லை. அதனை ஊன்றிக் காண வேண்டும். வாழ்க்கை நிலைகளின் ஏற்றத்தாழ்வு ஒருவரை எப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்று பழைய கதைகளின் தொடர்ச்சியோடு விளங்கிக்கொண்டேன். மேலும் சொல்வதற்கும் வண்டியளவுச் செய்திகள் உள்ளமையால் இங்ஙனம் துணிந்து எழுதுகிறேன்.

முதலில் சரவணனை எடுத்துக்கொள்வோம். அவர் சேலத்துக்காரர். நடிப்புக் கல்லூரியில் பயின்றவர். அவர் அறிமுகமானது ‘வைதேகி வந்தாச்சு’ என்ற திரைப்படத்தில்தான். அந்தப் படத்தினைப் பற்றிக் கூறியே தீரவேண்டும்.

வைதேகி வந்தாச்சு படத்தின் இயக்குநர் இராதாபாரதி. பதினைந்து வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்தபோதும் கே. ரங்கராஜ் என்னும் இயக்குநர் எப்படி முகமறியப்படாதவரோ அப்படி இராதாபாரதியும் முகங்காட்டாத இயக்குநரில் ஒருவர். பிற்பாடு அவர் கன்னடத் திரையில் வெற்றிபெற்ற படங்கள் சிலவற்றை இயக்கியதாக அறிகிறேன்.

இராதாபாரதியின் முதல் படம் ‘வைகாசி பொறந்தாச்சு.’ எங்களூர் ‘டைமண்ட்’ திரையரங்கில் வைகாசி பொறந்தாச்சு வெளியானபோது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அதே திரையரங்கில்தான் கரகாட்டக்காரன் திரைப்படமும் வெளியானது. கரகாட்டக்காரன் வெளியாகி எத்தகைய கூட்டத்தை ஈர்த்து அரங்கு நிறைந்து ஓடியதோ அதற்குச் சிறிதும் தாழ்வில்லாமல் ஓடிய படம் அது.

என் பள்ளி நண்பர்களில் ஒருவரான விஜய்ஆனந்த் அப்படத்தை இருபத்தைந்து முறைகள் பார்த்தார். இருபத்தாறாவது முறையாக என்னையும் அழைத்துச் சென்றார். ஊர்ப்பணக்காரரின் ஒற்றை மகளை ஏழை மாணவன் காதலிக்கும் பள்ளிக் காதல் கதை. இசையமைப்பாளர் தேவாவுக்கு வாழ்வு தந்த படம். படம் முழுக்கவே “மோதல் காதல் ஆடல் பாடல் சோர்தல் சேர்தல்” என்று அமைந்திருந்தது. ஏறத்தாழ எண்பது நாள்களுக்கு மேல் அத்திரையரங்கில் ஓடியது.

வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் கோவைப்பரப்பு உரிமையை வாங்கி வெளியிட்ட சக்தி சுப்பிரமணியம், அப்படத்தால் தமக்கு அப்போதே நாற்பது இலட்சங்கள் வரவு என்று கூறுகிறார். அப்படியானால் அத்திரைப்படம் அக்காலத்திலேயே நான்கைந்து கோடிகட்குமேல் திரையரங்குகளில் அள்ளியிருக்கும். அதன் வெற்றிக்குக் காரணம் நல்ல காதல்கதை, பாடல்கள், தொய்வில்லாத படமாக்கம் என்று பலவாறாகக் கூறப்பட்டது. இன்னொன்று இன்றியமையாதது. ‘அன்றலர்ந்த மலர்களாய்க்’ காதலன் காதலி வேடத்திற்கு இளையவர்களை அறிமுகப்படுத்தியதுதான் முதன்மையான காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திப் படங்களில் அறிமுகமாகும் இளம் நடிகரைப்போல் பிரசாந்த் அறிமுகப்படுத்தப்பட்டார். நாயகி காவேரிக்கு என் பள்ளி நண்பர் பட்டாளம் தொடங்காத குறைதான். சிவப்பாய் அழகாய் விளங்கிய நடிகர்களின் அறிமுகத்தால்தான் படம் வெற்றி என்ற பரவலான பேச்சு இயக்குநர் இராதாபாரதியைச் சீண்டியிருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ கறுத்த தேகமுடைய இருவரைத் தமது இரண்டாவது படத்தில் முதன்மை வேடங்களில் நடிக்க வைத்தார்.

‘வைதேகி வந்தாச்சு’ இரண்டாவது படம். கறுத்த நிறமுடைய சரவணன் அறிமுகம். நாயகி அர்ச்சனாவும் கறுப்பு. கட்டுப்பாடான ஊருக்குள் ஆசிரியையாக வருபவர்க்கு அவ்வூரின் சப்பாணியைப் போன்று அரைக்கிறுக்காகத் திரிபவனோடு காதல். இதுதான் அப்படத்தின் கதை. இயக்குநரின் முதற்பட வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாயிற்று.

எங்களூர் ஜோதி தியேட்டரில் அப்படம் வெளியீடு. அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் யாரென்று தெரியவில்லை. படம் முழுவதும் மங்கலாகவும், பாத்திரங்கள் தொலைவில் திரிபவையாகவும் இருந்தன. படம் படுதோல்வி. ஆனால், இதழ்களில் வெளியான தரமொழிகள் அறிமுக நடிகர் சரவணனின் நடிப்பை ஆகா ஓகோ என்று புகழ்ந்தன. அது உயர்வு நவிற்சியன்று, இயல்பு நவிற்சியே.

சரவணன் அப்படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். படுதோல்வியடைந்த படத்தில் நடித்திருந்தும் சரவணனுக்கு ஆகூழ்க் காற்று அடித்தது. அதற்குக் காரணம் அவர் விஜயகாந்தைப் போலவே இருந்ததுதான்.

திரைத்துறையில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கோழிகூவுது என்ற படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்திற்குக் கோழிகூவுது என்றே பெயர் வைக்க முயல்வார்கள். அதே பெயரை வைக்க முடியாது என்பதால் “கொக்கரக்கோ” என்று பெயர் வைப்பார்கள். கோழி கூவுது = கொக்கரக்கோ. பராசக்தியில் சிவாஜி எப்படி இருந்தாரோ அப்படியே தாம் இருந்ததுதான் தம்மீது திரைத்துறையின் பார்வை குவியக் காரணம் என்கிறார் நடிகர் இராஜேஷ். இரஜினிகாந்தைப் போலவே இருந்தமையால் விஜயகாந்த், நளினிகாந்த், சூரியகாந்த் என மூன்று நடிகர்கள் அறிமுகமாயினர். அவர்களில் விஜயகாந்த் தனித்த தடம் போட்டவர். விஜயபாபு, கங்கா, இரவீந்தர் போன்றவர்கள் கமலை நினைவுபடுத்தியவர்கள்.

செந்தூரப்பூவே திரைப்படத்தால் ஏறுமுகமாகிய விஜயகாந்தின் சந்தை மதிப்பு அடுத்த பத்தாண்டுகட்குப் பின்னடைவே காணவில்லை. இடையே புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் ஆங்கிலப்படங்களைப்போல் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றன. அந்நேரத்தில் அவரை அணுகுவது பெரும்பாடாக இருக்கவே சிறு முதலாளிகள் சரவணனை நாடினர்.

அப்போது சிறுபொருட்செலவில் மளமளவென்று படங்களை எடுத்தவர் ஆர்.பி. சவுத்திரி. அவருடைய நிலைய இயக்குநர் கே. எஸ். இரவிக்குமார். சேரன் பாண்டியன் வெற்றிக்குப் பிறகு இரவிக்குமார் எடுத்த படங்களுக்கு ஊர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. அவருடைய தொடக்க காலப் படங்களில் நாயகர்கள் ஆனந்த்பாபு, சரவணன், சரத்குமார் போன்றோரே.

சரவணனை வைத்து அவரெடுத்த ‘பொண்டாட்டி இராஜ்ஜியம்’ என்ற படம் நன்றாக ஓடியது. அடுத்து
‘சூரியன் சந்திரன்’ என்ற படத்திலும் சரவணன் இருநாயகரில் ஒருவர். இக்காலப்பகுதியில்தான் சரவணன் நடித்த இரவிக்குமார் படங்களில் சேரன் உதவியாளராக இருந்திருக்கக்கூடும்.

ஓர் உதவியாளர் இயக்குநரானால் அவரிடம் தோரணை காட்டிய நடிகர்களை முதலில் நீங்குவார். அப்படித்தான் அவர் ஓர் இயக்குநராகி வென்றபோது சரவணன் வாய்ப்பு கேட்கையில் தவிர்த்திருக்கக் கூடும். அதே நேரத்தில் அந்நாயகர் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தால் அவரை வைத்தே படமெடுப்பார்கள். திரைத்துறையில் அதுதான் நடக்கும்.

இயக்குநர் வி. சேகர் எடுத்த ’பார்வதி என்னைப் பாரடி’ என்ற சிறுவெற்றி பெற்ற படத்திலும் சரவணனே நாயகன். அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். “சின்ன பூங்கிளி சிந்தும் தேன்மொழி இனிக்கும் நன்னாளிது” என்ற அருமையான பாடல் (https://www.youtube.com/watch?v=5jMAFNMs5AQ) இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் சரவணனின் சந்தை மதிப்பு சரிந்தது. சரியும் சந்தையைத் தக்கவைக்க எல்லா நாயகர்களும் கடைசியாக எடுக்கும் கருவியான சொந்தப் படம் என்னும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. சரவணன் திரைத்துறையில் ஓரங்கட்டப்பட்டார். அக்காலத்தில் அவருடைய நேர்காணல் ஒன்றில் தமக்கு நேர்ந்தவை குறித்துச் சொன்ன ஒரு வாக்கியம் இன்றும் நினைவிருக்கிறது. “முதல் படம் வந்ததும் நிறைய படங்கள் வந்தன. எவற்றை ஏற்பது விலக்குவது என்று எனக்கு எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் என் மக்கள் தொடர்பாளர் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அங்கே போய் நடி என்றால் போனேன். வேண்டா என்றால் விட்டேன். முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தேன். அவற்றிலிருந்து பாடம் கற்று நானாக முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபோது என்னைத் தேடி யாரும் வரவில்லை. எல்லாம் போயிற்று…” என்றார். திரைத்துறையின் புகழாளர்கள் அதனை இயக்கும் பல்வேறு தலைகளின் கட்டுக்குள் இருப்பது விளங்கிற்று.

சேரனும் திரைத்துறையில் ஆயிரம் துன்பங்களைத் தாண்டித்தான் ஓர் ஆளானார். இரவிக்குமாரிடம் சேர்வதற்கு முன்பு நண்பர்களோடு தொடங்கிய ஒரு படம் அவருக்குப் பாடம். பொற்காலம் படம் வந்தபோது அவருடைய வாழ்க்கைத் தொடர் விகடனில் வந்தது என்று நினைவு. அவற்றில் பல செய்திகளைக் கூறுகிறார்.

மகாநதி திரைப்படத்தில் அவர் படக்குழுவில் இருந்திருக்கிறார். “இன்று நாம் எடுக்கக்கூடிய காட்சி பெருமாள் கோவிலில் நடப்பதாக இருக்கிறது. நாம் சிவன் கோவிலைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். எப்படிச் சரியாக இருக்கும் ?” என்று கமலிடமே கேட்டதாகவும் அதன் பிறகு அவர் உடனடியாக படக்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அந்நூலில் படித்த நினைவு.

கோலங்கள் திரைப்படத்தை எடுத்த ஹென்றி என்பவர்தான் சேரனின் முதல் படமான “பாரதி கண்ணம்மா”வின் முதலாளி. கோலங்கள் படத்தின் சுவரொட்டிகளைச் சென்னை நகர் முழுக்க ஒட்டும் பொறுப்பினை அவர் ஏற்றதாகவும் அந்நூலில் கூறிய நினைவு.

பாரதி கண்ணம்மா பெற்றி வெற்றியும் எளிய ஒன்றன்று. இன்றுவரை நாம் எண்ணிச் சிரிக்கும் வடிவேலின் நகைச்சுவை வாய்பாடு உருவான படம் பாரதி கண்ணம்மா. பொற்காலம் வெளிவந்து வெற்றி பெற்றபோது இனி திரைத்துறையில் எக்கதையை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நம்பிக்கை உதவி இயக்குநர்களிடையே தோன்றியதை மறுப்பதற்கில்லை.

பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய வடிவேலின் வெற்றிப் பயணம் ‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் முடுக்கமெடுத்தது. சேரன் அமைத்த காட்சிகளின் அடிப்படையால் ஆனவைதாம் வடிவேலின் பிற்கால நகைச்சுவைக் காட்சிகள்.

வெற்றிக்கொடி கட்டு படத்திற்கு ஏற்பட்ட மிகுபொருட்செலவினால் அதன் முதலாளி சிவசக்தி பாண்டியன் வெற்றியின் முழுச்சுவையை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆட்டோகிராப் என்ற படம் வெற்றியின் கொடுமுடியைத் தொட்டது. திரைத்துறையில் நாற்பதாண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்த பஞ்சு அருணாசலம் தமக்கொரு படத்தினை இயக்கித் தரும்படி சேரனை நாடினார். அப்போது தொடங்கப்பட்ட படம்தான் ‘மாயக்கண்ணாடி’.

‘திரைத்தொண்டர்’ நூலில் அப்படத்தினைப் பற்றி பஞ்சு அருணாசலம் கூறுமிடம் நெகிழ்ச்சிக்குரியது. இருக்கின்ற சொத்துகளை எல்லாம் வங்கியில் அடைமானம் வைத்து இவ்வளவு பணம் (ஆறு கோடி என்று நினைவு) திரட்டியிருப்பதாகவும் அந்தப் பொறுப்போடு நல்ல வெற்றியைத் தரும் படமாக இயக்கித் தருக என்று கேட்டுக்கொண்டு அப்பணத்தைத் தந்தார் என்றும் நினைவு.

“ஏலே எங்கே வந்தே ?” என்ற பாடலை இளையராஜா இசையமைத்துக் கொடுத்ததும் படம் எங்கேயோ போய்விட்டது என்று சேரன் இதழாளர்களிடம் கூறினார். (https://www.youtube.com/watch?v=kL8koe8RAnw) படம் எங்கேயும் போகவில்லை. போன விரைவில் திரும்பி வந்தது.

கண்ணதாசனிடம் தொடங்கி அங்குலம் அங்குலமாக முன்னேறி ஜெய்சங்கர், முத்துராமன், சிவக்குமார், இளையராஜா, கமல்ஹாசன், இரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஏவியெம் என்று அனைவர்க்கும் வெற்றி தந்து திரைத்துறையின் தனியாளுமையாக விளங்கிய பஞ்சு அருணாசலம் ‘மாயக்கண்ணாடி’யால் முடங்கினார்.

அத்தோல்வி சேரனை மிகுதியாய்ப் புண்படுத்தியிருக்க வேண்டும். பொக்கிஷம் என்ற படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தார். சொல்ல மறந்த கதை, யுத்தம் செய், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்கள் வந்தன. அவற்றால் நலம் விளைந்ததா… தெரியாது.

பிறகு வீட்டிற்குள் திரைப்படத்தினைச் சேர்க்கும் முயற்சியாக வீடுதோறும் திரைப்படம் என்ற திட்டத்தினைத் தொடங்கினார். அம்முயற்சியைச் சிறிதும் தாழ்த்தி மதிப்பிடுவதற்கில்லை. என் வீட்டருகில் இருந்த மளிகைக் கடையில்கூட ‘ஜேகே என்னும் நண்பனின் கதை’ குறுந்தகடு கேட்பாரற்றுக் கிடந்தது. அத்திட்டமும் தோற்றது. ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ திருத்தங்களை ஏற்கவில்லை.

திரைத்துறை மனிதர்களை எப்படியெல்லாம் மென்று துப்புகிறது, ஆக்கி அழுத்துகிறது என்பதற்குச் சரவணனும் சேரனும் கண்முன்னே காட்டப்படும் எடுத்துக்காட்டுகள். இத்தனை அழுத்தங்களுக்கிடையே ஓரிடத்தில் நாட்கணக்கில் இருக்கையில் அவர்கள் இவ்வளவு மட்டும் இயல்பாக இருந்ததே செயற்கரிய செயல்தான். அவ்விருவரையும் பார்க்கையில் எனக்கு மாபெரும் மனித கதையின் துல்லியமான இரு பாத்திரங்களாய்த் தென்படுகின்றனர். தாயம் விழவில்லை என்றால் ஆட்டத்திலிருந்து எழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எல்லாத் துறைகட்கும் பொருந்தும். அது திரைத்துறைக்கு மிகவும் பொருந்தும்.

– கவிஞர் மகுடேசுவரன்

https://A1TamilNews.com

From around the web