பேட்ட விமர்சனம்

நடிகர்கள் – ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுத்தின் சித்திக், சசி குமார், இயக்குநர் மகேந்திரன், பாபிசிம்ஹா ஒளிப்பதிவு – திரு இசை – அனிருத் தயாரிப்பு – கலாநிதி மாறன் எழுத்து இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ் தன் மனைவி, மகன், உடன் பிறவா சகோதரனாக திகழும் நண்பன் உள்பட ஏராளமானோரை ஒரு குடும்ப விழாவில் வைத்து கொன்று விட்டு தப்பி ஓடும் வில்லனை இருபது ஆண்டுகளுக்கு பிறகு தேடிப்பிடித்து அழிக்கவேண்டிய சூழல் வருகிறது
 

டிகர்கள் – ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுத்தின் சித்திக், சசி குமார், இயக்குநர் மகேந்திரன், பாபிசிம்ஹா

ஒளிப்பதிவு – திரு
இசை – அனிருத்
தயாரிப்பு – கலாநிதி மாறன்
எழுத்து இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்

தன் மனைவி, மகன், உடன் பிறவா சகோதரனாக திகழும் நண்பன் உள்பட ஏராளமானோரை ஒரு குடும்ப விழாவில் வைத்து கொன்று விட்டு தப்பி ஓடும் வில்லனை இருபது ஆண்டுகளுக்கு பிறகு தேடிப்பிடித்து அழிக்கவேண்டிய சூழல் வருகிறது ஹீரோ ரஜினிக்கு. அந்த சம்பவத்தை அவர் எப்படி தரமாக செய்து முடிக்கிறார் என்பது தான் ‘பேட்ட’.

ஊட்டி கல்லூரி ஒன்றில் ஹாஸ்டல் வார்டனாக அதிரடியாக சேறும் ரஜினிகாந்த், அங்கு அராஜகம் செய்யும் சீனியர் மாணவர் பாபிசிம்ஹா & கோ -வை ஜஸ்ட் லைக் தட் அடக்கி மொத்த ஹாஸ்டலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருக்கிறார். அந்தக் காட்சியில் தொடங்கி கடைசி காட்சியில் ஒரு கெட்ட ஆட்டம் போட்டு துப்பாக்கியை நீட்டுகிறாரே அதுவரை முழுக்க முழுக்க ரஜினி ராஜ்ஜியம் தான்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த ரஜினியின் தோற்றமும், இளமையும், ஸ்டைலும் பேட்டையில் மீண்டும் பார்க்க முடிகிறது. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை, ஆனால் அவரது வேகம்… அது இம்மியளவும் இந்தப் படத்தில் குறையவில்லை. சொல்லப்போனால் அன்று பார்த்த ராஜினியிடம் இருந்த வேகத்தை விட ஒரு மடங்கு அதிகமாகவே பார்க்கமுடிகிறது.

ஊட்டியில் ‘இளமை திரும்புதே’ என துள்ளிக்குதித்து பாடுவதென்ன, தளபதி ஸ்டைலில் ‘உல்லாலா’ பாட்டுக்கு ஆட்டமென்ன, கல்லூரிக்குள் நடக்கும் பொறிபறக்கும் அந்த சண்டை காட்சியில் அவர் ‘நுன்சாக்’ சுற்றும் வேகமென்ன… பார்க்கும் ஒவ்வொருவரையும் அசர வைக்கிறார் ரஜினி.

கண்ணாடியை சுழற்றி மாற்றும் ஸ்டைல், சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் அவரது எவர் கிரீன் ஸ்டைல். துப்பாக்கியை சுழற்றும் அவரது லாவகம் போன்றவற்றையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏங்கி போயிருந்தார்கள், அதையெல்லாம் இந்தப் படத்தில் மொத்தமாக தீர்த்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

ஒவ்வொரு ஃபிரமிலும் ரஜினியை பார்க்கும் ரசிகர்கள் “தலைவா உங்களுக்கு வயசே ஆகாது” என்று கழுத்து நரம்புகள் புடைக்க கத்துகிறார்கள். அதுதான் இந்தப் படத்தில் ரஜினி கெட்டப்புக்கு கிடைத்த பெரிய வெற்றி.

குறிப்பாக அந்த பேட்ட வேலனுக்காகவே இன்னொரு முறை இந்தப் படத்தை பார்க்கலாம்.

த்ரிஷா, சிம்ரன், பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், இயக்குநர் மகேந்திரன், சசிகுமார் இவர்களெல்லாம் நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற சூரியன் மட்டும் தான் எல்லார் கண்களிலும் நிறைந்து நிற்கிறது.

டெக்னிக்கல் பக்கம் பார்த்தால் ஒளிப்பதிவாளர் திரு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இயக்குநரின் வலது, இடது கரங்களாக நிற்கிறார்கள். அதிலும் அனிருத் ‘அடிப்பொளி’. தனது அபிமான தலைவர் படத்திற்கு இசையமைக்க கிடைத்த வாய்ப்பை பிரமாதமாக பயன்படித்திக் கொண்டிருக்கிறார். ‘தட்லாட்டம்’, ‘உல்லாலா’, ‘இளமை திரும்புதே’, ‘பேட்ட பராக்’, பாடல்கள் எவ்வளவு பெரிய ஹிட் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரொம்ப நாளைக்குப் பிறகு காதார கேட்டு மகிழ்ந்த பாடல்கள் என்றால் மிகையில்லை.

ஒரு ரஜினி படம் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள் என்பதை சக ரசிகனாக உணர்ந்து ‘பேட்ட’ படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படத்தில் குறை என்று சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் சில காட்சிகளை இன்னும் ஷார்ப்பாக்கி இருக்கலாம். அதில் ஒன்று விஜய் சேதுபதியின் கேரக்டர், இன்னொன்று நீண்டு கொண்டே போகும் வட இந்திய காட்சிகள். படத்திற்கு பெரிய ப்ளஸ் ராஜினிக்காகவே எழுதப்பட்ட பன்ச் வசனங்கள், ஒரு ரசிகனாக தன் தலைவரை பார்த்து பார்த்து மெருகேற்றி ரசிக்க கொடுத்த கார்த்திக், ஒரு படைப்பாளியாக தன் முதிரையையும் பதிக்க தவறவில்லை.

கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் காவி கும்பல் செய்யும் அழிச்சாட்டியங்களை இவ்வளவு வெளிப்படையாக வேறு யாரும் சினிமாவில் பதிவு செய்ததில்லை. வெல்டன் கார்த்திக்.

பேட்ட… ரஜினியின் சிறப்பான, தரமான சம்பவம்.

Rating : 4.0/5.0 – இது வணக்கம் இந்தியாவின் ரேட்டிங், ஆனால் ஒரு ரஜினி ரசிகனாக இந்தப் படத்திற்கான மதிப்பீடு 5.0/5.0

– வணக்கம் இந்தியா

From around the web