நேர் கொண்ட பார்வை விமர்சனம்

நடிகர்கள்: அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே ஒளிப்பதிவு: நிரவ் ஷா இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: போனி கபூர் இயக்கம்: எச் வினோத் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்தான் இந்த நேர் கொண்ட பார்வை, சின்னச் சின்ன மாற்றங்களுடன். ஒரு ரெகுலர் தமிழ் மாஸ் ஹீரோவுக்கான கதைக்களம் இல்லை என்றாலும், கிடைத்த களத்தில் அஜித் என்ற நடிகரை மாஸ் காட்ட வைத்திருத்கிறார் இயக்குநர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா மூவரும்
 

டிகர்கள்: அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே

ஒளிப்பதிவு: நிரவ் ஷா

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: போனி கபூர்

இயக்கம்: எச் வினோத்

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்தான் இந்த நேர் கொண்ட பார்வை, சின்னச் சின்ன மாற்றங்களுடன்.

ஒரு ரெகுலர் தமிழ் மாஸ் ஹீரோவுக்கான கதைக்களம் இல்லை என்றாலும், கிடைத்த களத்தில் அஜித் என்ற நடிகரை மாஸ் காட்ட வைத்திருத்கிறார் இயக்குநர்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா மூவரும் ஒரே அறையில் தங்கி வேலைக்குப் போய் வரும் நவீன பெண்கள். செக்ஸ், ட்ரிங்ஸ், பார்ட்டி எல்லாம் அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஒரு நாள் ஒரு பணக்கார – அரசியல் பின்னணி கொண்ட இளைஞன் மற்றும் அவனது நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போக, அங்கே ஷ்ரத்தாவிடம் எல்லை மீறுகிறான் பணக்கார இளைஞன். அவனை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தோழிகளுடன் வெளியேறுகிறார் ஷ்ரத்தா. அந்த இளைஞன் தன் அரசியல் செல்வாக்கை வைத்து, ஷ்ரத்தாவையும் தோழிகளையும் துரத்த ஆரம்பிக்கிறான். அவர்களை பாலியல் தொழில் செய்பவர்கள் என போலீசில் வழக்குப் பதிந்து கைது செய்யவும் வைக்கிறான். இதையெல்லாம் எதிர்வீட்டில் வசிக்கும் வக்கீல் அஜித் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்களுக்காக வாதாடவும் வருகிறார். அவரால் அந்தப் பெண்களைக் காக்க முடிந்ததா என்பதுதான் உச்சகட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் அவன் செயல் என்று ஒரு படம் வந்தது. கிட்டத்தட்ட அந்த மாதிரி படம்தான் இது. பொதுவாக ஒரு நாவல் அல்லது சினிமாவில் பாதிக்கப்பட்டவர்கள் மீது படிப்பவர்களுக்கு அல்லது பார்வையாளர்களுக்கு அனுதாபம் வரவேண்டும். அதுதான் அவர்களை கதையோடு ஒன்ற வைக்கும். ஆனால் இந்தப் படத்தில் அது நேர் எதிர். இது ஒரு ஆணின் பார்வையில் என்றல்ல… உடன் படம் பார்த்த பல பெண்களின் மன நிலையும் அதுவே. ஷ்ரத்தா அன்ட் கோவின் வாழ்க்கை முறையை திரையில் பார்க்கும் பெண்களே ‘இவளுங்களுக்கு வக்காலத்து வேறயா…’ என்றுதான் கமெண்ட் அடிக்கிறார்கள். படத்துக்கு பெரிய மைனஸ் இது.

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை யாரும் தொடவே கூடாது என்பதுதான் படத்தின் ஒன்லைன், கதை நாயகி ஷ்ரத்தா, ஏற்கெனவே தன் காதலனிடமும் வேறு சில ஆண்களிடமும் தன் கன்னித் தன்மையை இழந்தவர்தான். ஆனால் அதெல்லாம் அவள் விருப்பப்படி நடந்தவை. ஆனால் விருப்பத்துக்கு மாறாக ஒருவன் தொடும்போதுதான் அவள் பிரச்சினை செய்கிறாள். தண்டனைக்குரிய குற்றமாக சட்டத்தின் முன் நிறுத்துகிறாள். தனிமனித சுதந்திரத்தின்படி அவள் செய்தது சரிதான் என்றாலும், இந்த சமூகத்தின் பார்வையில் அவளது சுதந்திரத்தை விட, அவளது நடத்தையே குற்றமாகப் பார்க்கப்படும் ஆபத்து உள்ளது.

கதைப்படி அஜித்துக்கு பெரிய ரோல் இல்லை. ஒரு விரிவாக்கப்பட்ட கவுரவ வேடம் இது. ஆனாலும் அந்த வேடத்தை மிக நேர்த்தியாகவே செய்திருக்கிறார் அஜித். ஆனால் வசன உச்சரிப்பில் ஏன் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இன்னும் பிடிவாதமாக தமிழை ‘நறைய நறைய’ கொல்கிறார் என்று புரியவில்லை. அவருக்காகவே படத்தில் வைக்கப்பட்ட ஸ்டன்ட் காட்சியில் நிமிர வைக்கிறார்.

நேர் கொண்ட பார்வை விமர்சனம்

அஜித் ஜோடியாக ‘ஆன்ட்டி’ வித்யாபாலன். பெரிதாக கவரவில்லை.

ஷ்ரத்தாவுக்கு பிரதான வேடம். நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் கடைசி வரை அந்தப் பாத்திரத்தின் மீது அனுதாபம் வரவே இல்லை. அவரது தோழிகளாக வரும் அபிராமி, ஆன்ட்ரியாவும் இயல்பாக நடித்துள்ளார்கள். ஜெயப்பிரகாஷுக்கு வெறும் பில்ட்அப்தான்.

அஜித்துக்கு எதிராக வழக்காடுபவராக வரும் ரங்கராஜ் பாண்டே ரொம்ப சவுண்ட் விடுகிறார்… ஒரு நடிகராக ஜஸ்ட் பாஸ்தான்.

யுவனின் இசையில் இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். குறிப்பாக அந்த சண்டைக் காட்சியில்! பிங்க் படத்தின் தரத்துக்கு நிகராக காட்சிப்படுத்தி இருக்கிறார் நிரவ் ஷா.

இந்தப் படம் வசனங்கள் மூலம் நகர்த்தப்பட வேண்டிய படம். இந்திப் படத்தின் ஒப்பிட்டால், வசனங்கள் இன்னும்கூட ஷார்ப்பாக இருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு அலுப்பைத் தருகின்றன நீதிமன்றக் காட்சிகள்.

அஜித்துக்காக சில மாற்றங்களைச் செய்த இயக்குநர், திரைக்கதையில் தமிழ் சூழலுக்கு ஏற்றபடி சில மாறுதல்களைச் செய்திருந்தால் நேர் கொண்ட பார்வை ராஜபார்வையாக அமைந்திருக்கும்.

மதிப்பீடு: 2.75 / 5.0

 

From around the web