நாங்குனேரி இடைத்தேர்தல் முடிவை மாற்றுமா சாதிக்கட்சிகள்?

நாங்குனேரி தொகுதி இடைத் தேர்தலில் சாதிக்கட்சிகளின் பங்களிப்பு தேர்தல் முடிவை மாற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்த்குமார், கன்னியாகுமரி தொகுதி எம்.பி ஆனதால் இடைத்தேர்தல் வந்தது. நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பெருவாரியாக வசிப்பதால் அதிமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களே வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் அதே சமுகத்தைச் சார்ந்தவரே வேட்பாளர். தேவேந்திரகுல வேளார்கள் சமூகத்தின் கட்சிகளான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும்,
 

நாங்குனேரி இடைத்தேர்தல் முடிவை மாற்றுமா சாதிக்கட்சிகள்?நாங்குனேரி தொகுதி இடைத் தேர்தலில் சாதிக்கட்சிகளின் பங்களிப்பு தேர்தல் முடிவை மாற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்த்குமார், கன்னியாகுமரி தொகுதி எம்.பி ஆனதால் இடைத்தேர்தல் வந்தது.

நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பெருவாரியாக வசிப்பதால் அதிமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களே வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் அதே சமுகத்தைச் சார்ந்தவரே வேட்பாளர்.

தேவேந்திரகுல வேளார்கள் சமூகத்தின் கட்சிகளான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும், புதிய தமிழகமும் அதிமுக கூட்டணியில் இருந்தன. ஆனால், தங்கள் சமூக மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கருப்புக் கொடி கட்டி போராடத் தொடங்கினார்கள்.

எங்கள் சமூக மக்களின் கோபத்திற்கு எங்களால் பதில் சொல்ல முடியாது என்று ஜான் பாண்டியனும், டாக்டர்.கிருஷ்ணசாமியும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டனர்.ஓய்வுபெற்ற பேராசிரியர் பேச்சிமுத்து என்பவர் தேவேந்திரகுல வேளாளர்களுக்காக ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இந்த மக்களுக்குப் பின்னால் இருந்து செயல்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆக, தேவேந்திரகுல வேளாளர்களில் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்குமா என்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட பனக்காட்டு படை கட்சியின் சார்பில் ஹரிநாடார் என்பவர் போட்டியிடுகிறார். வடக்கே ”வன்னியர் ஓட்டு அன்னியருக்கு அல்ல” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முழக்கத்தைப் போல் “நாடார் ஓட்டு நாடாருக்கே” என்று இந்தக் கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா பிரச்சாரம் செய்தார். அந்த சமூக மக்கள் பெருவாரியாக வசித்து வரும் கிராமங்களாகத் தேர்ந்தெடுத்து இருவரும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

இளைஞர்களை குறிவைத்து செயல்படும் பனங்காட்டுப் படை கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும், அது காங்கிரஸ் அல்லது அதிமுக வாக்குகளைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

From around the web