“ஆப் கி பார் ட்ரம்ப் சர்கார்” மோடி முழக்கமும் அதிபர் ட்ரம்பின் அந்தர் பல்டியும்?

ஹூஸ்டன்: பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சிக்கு இந்திய வம்சாவளியினரிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறியுள்ளார்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்சாஸின் முக்கிய நகரமான ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த விழாவில், டெக்சாஸின் நான்கு முக்கிய நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும், அண்டை மாநிலங்கள் தவிர தொலை தூர மாநிலங்களிலிருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய வம்சாவளியினர் வருகை தந்திருந்தனர். அமெரிக்க இந்திய
 

“ஆப் கி பார் ட்ரம்ப் சர்கார்” மோடி முழக்கமும் அதிபர் ட்ரம்பின் அந்தர் பல்டியும்?

ஹூஸ்டன்: பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற
‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சிக்கு இந்திய வம்சாவளியினரிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறியுள்ளார்கள். 

அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்சாஸின் முக்கிய நகரமான ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த விழாவில், டெக்சாஸின் நான்கு முக்கிய நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும், அண்டை மாநிலங்கள் தவிர தொலை தூர மாநிலங்களிலிருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய வம்சாவளியினர் வருகை தந்திருந்தனர். அமெரிக்க இந்திய வம்சாவளியினருக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அங்கீகாரம் என்றே சொல்லலாம். அமெரிக்க இந்தியர்களின் பங்களிப்பு பற்றி அதிபர் ட்ரம்ப் உட்பட அனைவரும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்கள்.

பிரதமர் மோடி பேசும் போது, இது தான் என் குடும்பம். இங்கு மட்டுமல்ல இந்தியா மற்றும் உலகின் நாலாப் பக்கங்களிலும் இருந்து இந்த விழாவை நேரலையில் கண்டு கொண்டிருக்கும் அனைத்து இந்தியர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று ட்ரம்பிடம் தெரிவித்தார்.

ஆப் கி பார் ட்ரம்ப் சர்கார்

இந்திய – அமெரிக்க நீண்ட நெடிய நட்புறவு அதன் உச்சத்தில் உள்ளது. இந்தியாவுக்கு மிக நெருக்கமான நண்பர் இப்போது வெள்ளை மாளிகையில் இருக்கிறார். இந்திய – அமெரிக்க உறவு இன்னும் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த நட்பு நீடிக்கவேண்டும். “ஆப் கி பார் ட்ரம்ப் கா சர்க்கார்” என்று தன்னுடைய தேர்தல் முழக்கத்தை ட்ரம்புக்காக மாற்றிச் சொன்னார் பிரதமர் மோடி. அமெரிக்க இந்தியர்களிடம் பிரதமர் மோடியின் வெளிப்படையான தேர்தல் பிரச்சாரமாகவே இது கருதப்படுகிறது.

இடையே, இந்தியாவில் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிடத் தவற வில்லை பிரதமர் மோடி. நிகழ்ச்சியின் இறுதியாக அரங்கத்தின் மத்தியில் உள்ள “வெற்றி வளையத்தை” அதிபர் ட்ரம்பின் கையைப் பிடித்துக் கொண்டே வலம் வந்தார். இருவரும் மற்றொரு கையை பார்வையாளர்களுக்குக் காட்டி உற்சாகப் படுத்த அரங்கமே ஆர்ப்பரித்தது.

நிகழ்ச்சி முடிந்து வெளிவந்த அனைவருடைய முகத்திலும் அத்தனை மகிழ்ச்சியும் பெருமிதமும் தவழ்ந்ததைக் காண முடிந்தது. இந்திய – அமெரிக்க வெளியுறவு வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அனைவருமே கருதினார்கள் என்றே சொல்லலாம். அதிபர் ட்ரம்ப் மீதும் பிரதமர் மோடி மீதும் பிற காரணங்களுக்காக அதிருப்தி கொண்டவர்கள் கூட, இந்த நிகழ்ச்சி மூலம் இரு நாடுகளின் நல்லுறவு மேம்பட்டது, அடுத்த நிலையை எட்டியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

இந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் ஒரு நாளுக்கு மட்டுமே நீடிக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை “ஹௌடி மோடி” நிகழ்ச்சியில் பங்கேற்று தீவிரவாதத்தை இரு நாடுகளும் இணைந்து வேரறுப்போம் என்று முழங்கிய அதிபர் ட்ரம்பின், அடுத்த நாள் பேட்டி சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது.

“ஆப் கி பார் ட்ரம்ப் சர்கார்” மோடி முழக்கமும் அதிபர் ட்ரம்பின் அந்தர் பல்டியும்?

ஆவேசமான பேச்சு

“நேற்று மிகவும் கடுமையான் பேச்சை கேட்டேன். நான் அங்கே இருந்தேன். அப்படி ஒரு பேச்சைக் கேட்பேன் என்று நான் நினைக்க வில்லை. ஆனால், நான் அங்கே அமர்ந்து இருந்தேன். இந்தியப் பிரதமரின் மிகவும் கடுமையான பேச்சை கேட்டேன். 59 ஆயிரம் பேர் இருந்த அந்த அரங்கத்தில் அவரின் பேச்சுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது,” என்று செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானை சந்திக்கச் செல்வதற்கு முன்னால் தான் செய்தியாளர்களிடம் இப்படிப் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். முதலில் இந்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கச் சென்றதால் இப்படிப் பேசினாரோ?.

அதிபர் ட்ரம்பின் இந்த பேட்டி குறித்து வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவரிடம் கருத்து கேட்ட போது, “நாளை அதிபரை சந்திக்கிறோம். அது வரை காத்திருப்போம்” என்று பதில் சொல்லியிருந்தார்.

அடுத்த நாள் செவ்வாய்கிழமை பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்கள் தீவிரவாதம் தொடர்பான கேள்விகளை வீசினார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதைப் பற்றி நீங்கள் இம்ரான் கானிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோது, “அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிரதமர் மோடி தான் சொல்ல வேண்டும். ஹூஸ்டனில் அவர் மிகவும் உரக்கச் சொல்லி விட்டார்,” என்று பதிலளித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு, இந்திய – அமெரிக்க உறவுக்கு இப்போதைய சூழலை விட சிறந்த சூழ்நிலை இருந்தது கிடையாது என்று கூறிய அதிபர், இந்தியாவுக்குள் திவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பினால் அதை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார். இந்த இரு ஜென்டில்மென்களும் (மோடி – இம்ரான் கான்) சந்தித்துப் பேசினால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அப்படி ஒன்று நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்பின் கூற்றுப் படி ஹூஸ்டனில் குழுமியிருந்த 59 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் முன்பாக “ஆப் கி பார் ட்ரம்ப் கா சர்க்கார்” என்று கிட்டத்தட்ட நேரடியாகவே அதிபர் ட்ரம்புக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி.  அடுத்த நாளே பிரதமரின் பேச்சை குறை கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும், மீடியேட்டராக செயல்பட தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

“பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவல்” என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளாரா அதிபர் ட்ரம்ப்?. அவரை நேரில் கண்டு ஆர்ப்பரித்த 59 ஆயிரம் இந்திய வம்சாவளியினருக்கும் இது தான் அதிபர் ட்ரம்ப் சொல்லும் சேதியா?

– இர. தினகர்

From around the web