திருக்குறளுக்கு முழுமையாக உரை எழுதிய முதல் பெண்... தமிழ்க்காரிக்கு குவியும் பாராட்டுக்கள்!

தமிழ்க்காரி என்று அறியப்படும் சித்ரா மகேஷ், உடுமலைப் பேட்டை அருகே உள்ள தளி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவர். உடுமலைப் பேட்டையில் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற தமிழ்க்காரி, அதன் பின்னர் தமிழில் முதுகலைப் பட்டம் பயின்று, அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் குடியேறியவர், அங்கே 1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லி சாதனையாளராக இடம் பிடித்தார். டல்லாஸ் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு தமிழ் அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வகித்து வரும் தமிழ்க்காரி, குறும்படங்களுக்கு பாடல்களையும் இயற்றியுள்ளார்.
தமிழில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய தமிழ்க்காரி, ‘என் செடி உன் பூக்கள்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். குறுந்தொகைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து எளிய விளக்கங்களுடன் ‘பூக்கள் பூத்த தருணம்’, கபிலரின் குறிஞ்சிப் பாட்டு நூலை எளிய கவிதைகளாக ‘காதல் கதை சொல்லட்டுமா?’ என்றும் புத்தகங்களாக வெளியிட்டுள்ள தமிழ்க்காரியின் நான்காவது நூல் ‘திருக்குறள் 3.0’.
சென்னையில் நேற்று நடந்த இந்த நூலின் வெளியீட்டு விழாவில், திரு.சுப.வீரபாண்டியன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அயலகத் தமிழர் நல வாரிய தலைவரும், சுற்றுச்சூழல் அணியின் செயலாளருமான திரு.கார்த்திகேய சிவசேனாபதியும், தமிழ் வளர் மையத்தின் இயக்குநர் திரு.இரா.குறிஞ்சிவேந்தனும், கவிஞர் மு.முருகேஷூம் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுகளைக் கொண்ட திருக்குறளுக்கு முழுவதுமாக உரை எழுதிய முதல் பெண்மணி என்கிற சாதனையை இதன் மூலம் தமிழ்க்காரி என்றழைக்கப்படுகிற சித்ரா மகேஷ் பெற்றுள்ளார். 1330 குறட்பாக்களுக்கும், மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய குறுங்கவிதைகளாகவும், எளிமைப்படுத்தி உரைநடையாகவும் எழுதியிருக்கிறார் தமிழ்க்காரி.