முல்லைப் பூவே

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 26 காதலியைப் பாராட்டவும், அவள் அழகைப் புகழ்ந்து பேசும்பொழுது உவமை கூறி ஒப்புமை கூறிடவும் எனப் பெரும் பங்கு வகிப்பவை மலர்கள். இயற்கையின் படைப்பில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் தனித்துவத்துடன், தனி மணத்துடன் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் சில அழகுபடுத்த, நறுமணத்திற்காக, மருத்துவத்திற்காக என்று பல்வேறு முறையில் பயன்படுத்தப்பட்டாலும் பெண்களின் அழகிற்கு இணையாக உவமைப்படுத்திச் சொல்லும்போதுதான் அழகிற்கு அழகு சேர்த்தால் போல தனியின்பம் தரும் மலர்கள்.
 
       ‘சங்கம் மொழிந்த காதல்’  – காதல் 26
முல்லைப் பூவே
காதலியைப் பாராட்டவும், அவள் அழகைப் புகழ்ந்து பேசும்பொழுது உவமை கூறி ஒப்புமை கூறிடவும் எனப் பெரும் பங்கு வகிப்பவை மலர்கள். இயற்கையின் படைப்பில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் தனித்துவத்துடன், தனி மணத்துடன் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் சில அழகுபடுத்த, நறுமணத்திற்காக, மருத்துவத்திற்காக என்று பல்வேறு முறையில் பயன்படுத்தப்பட்டாலும் பெண்களின் அழகிற்கு இணையாக உவமைப்படுத்திச் சொல்லும்போதுதான் அழகிற்கு அழகு சேர்த்தால் போல தனியின்பம் தரும் மலர்கள்.
 
பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு
மல்லியே சின்ன முல்லையே
முல்லை மலர்மேலே மொய்க்கும் வண்டுபோலே
பூவாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்
முல்லை அரும்பே மெல்லத் திரும்பு என்ன குறும்பு
 
போன்ற பல நூறு பாடல்கள், கவிதைகள் எழுதப்பட்டுள்ளது. யார் என்ன மனநிலையில் பார்க்கிறோமோ அந்நிலைக்குத் தக்கவாறு நம்முடன் சேர்ந்திருக்கும் பூக்கள். காதல் என்ன உணர்வைக் காதலனுக்கு அல்லது காதலிக்குத் தருகிறதோ அந்த உணர்வுடன் அரவணைத்துச் செல்லும் மலர்கள். காதலி தன்னுடன் இல்லாத பொழுதுகளில் பூக்களைப் பார்த்தால் சிரிப்பு, அவள் நிறம், கண்கள், பற்கள் என ஒவ்வொரு பூவும் அவளைப்பற்றிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும்.
 
காதலியைவிட்டுப் பிரிந்த தலைவன் திரும்பி வந்துவிடுவேன் என்று சொன்ன காலம் தாண்டி வருகிறான். வேலை முடிந்து மக்கள் அனைவரும் வீடு திரும்பும் மாலை நேரம் பொலிவு இழந்து இரவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாலை நேரத்தில்தான் முல்லைப் பூக்கள் மலரும், அவை தன் வெண்மையான அரும்புகளை மலர்த்திச் சிர்ப்பது போல உள்ளன முல்லை நிலத்தில். முல்லை மலரைப் பற்களுக்கு ஒப்பிடுவர். வரும் வழியில் முல்லை சிரிப்பதுபோல் மலர்ந்திருப்பது, சொன்னதுபோல் குறித்த நேரத்தில் வராதுபோனதை எள்ளி நகைப்பது போல் உள்ளது எனத் தலைவன் எண்ணுகிறான். அம்முல்லை மலரிடம் தலைவியைவிட்டுத் தனித்திருக்கும் என்னைப் பார்த்துச் சிரிப்பது சரியா? இது உனக்குத் தகுமா? எனக் கேட்பதாக அமைந்த பாடல் இது.
                                 
குறுந்தொகைப்பாடல்
 
கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர் புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று-இது தமியோர் மாட்டே? (162)
 
கருவூர்ப் பவுத்தினரார் எழுதியது
தலைவன் கூறியது
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தன் வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் மலர்ந்திருக்கும் முல்லையைப் பார்த்துக் கூறியது.
 
அருஞ்சொற்பொருள்
 
கார்புறந் தந்த- மேகத்தால் பாதுகாக்கப் பெற்ற
நீருடை- நீரை உடைய
வியன்- அகன்ற
புலத்துப்- முல்லை நிலத்தில் வழியாக
பலர்- பலர்
புகுதரூஉம்- புகும், நுழையும்
புல்லென் மாலை-ஒளியிழந்த/பொலிவு இழந்த மாலை நேரத்தில்
முல்லை- முல்லையே
வாழியோ- நி வாழ்வாயாக
முல்லை- முல்லையே
நீ நின்- நீ உனது
சிறுவெண் முகையின்- சிறிய வெண்மையான அரும்புகளினால்
முறுவல் கொண்டனை- புன்னகை கொண்டாய்
நகுவை போலக் காட்டல்- எள்ளிச் சிரிப்பது போலக் காட்டுதல்
தகுமோ- உனக்கு முறையா? /தகுமோ
மற்றிது- அசைச்சொல்
தமியோர் மாட்டே- தலைவியைப் பிரிந்து தனித்து இருப்பவரிடம்
 
பாடலின் பொருள்
 
முல்லையே நீ வாழ்வாயாக! முல்லையே! மேகத்தால் பாதுகாக்கப் பெற்ற நீரை உடைய அகன்ற முல்லை நிலத்தில் வழியே பலர் தம் வீட்டிற்குத் திரும்பும் பொலிவற்ற மாலை நேரத்தில், நீ உனது சிறிய வெண்மையான அரும்புகளினால் புன்னகை கொண்டாய். தலைவியைப் பிரிந்து தனித்திருப்பவரைப் பார்த்து எள்ளி நகைப்பது போலக் காட்டுவது சரியா?
 
எளிய வரிகள்
 
முல்லை மலரே!
நீ வாழ்க முல்லை மலரே!
மேகம் காத்து வைத்த நீர் 
மழையாகும் முல்லை
நிலத்து வழிப்பலர் 
வீடு திரும்பிச் செல்லும் 
பொலிவிலா மாலையில்,
நீ உன் வெண்மையான
அரும்புகளால் சிரிக்கிறாய்!
காதலியைப் பிரிந்தவன்
தனிமையில் இருக்கையில்
எள்ளிச் சிரிப்பது போல
வம்பு செய்வது சரியா?
இது உனக்குத் தகுமா?
 
தலைவன் வரும் வழியில் மலர்களும், மரங்களும் நிறைந்து இயற்கை தன் எழிலோடு இயல்பாகத் தமிழனின் வாழ்வில் இருந்திருக்கின்றது. இன்று சாலையோரம் இருந்த சோலைகளும், ஏன் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரங்களே இல்லாத நிலை வளர்ந்துகொண்டிருக்கிறது தமிழகத்தில். மரங்கள் மண்ணின் வளங்களென்பதை மறந்து, மழை பொய்த்துப் போகக் காரணமாக இருந்துவிட்டுப் பிறரைக் கைகாட்டுவதில் பலனில்லை. மாற்றம் என்பது நம்மிடம் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன் வீட்டைப் போலவே நாட்டையும் காத்திட வேண்டும். நம் வீடு, நம் ஊர், நம் நாடு என்ற எண்ணம் ஓங்கிட வேண்டும். சில சமூக ஆர்வலர்களும். போராளிகளும் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. அவர்களோடு இணைந்து உடனிருந்து உழைத்திட்டால் மட்டுமே நம் சங்கத்தமிழன் வாழ்ந்த தமிழ்நாட்டைக் காணமுடியும். விதைப்பது அவர்களாக இருக்கட்டும். விளைந்து விருட்சங்களாகி வீட்டிற்கும் நாட்டிற்கும் வெளிச்சம் தருவது நாம் அனைவருமாய் இருப்போம்.
 
தொடரும்
 
– சித்ரா மகேஷ்
 
ஒவியம்: உதய பாஸ்கர் 
 
முந்தைய வாரம்

From around the web