ஆண்களும் இளைஞர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்கள்! தமிழ்க்காரி விழாவில் முனைவர் குறிஞ்சி வேந்தன்!!

 
Chitra

சென்னையில் நடைபெற்ற தமிழ்க்காரியின் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில், இவை ஆண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்கள் என்று முனைவர் குறிஞ்சி வேந்தன் குறிப்பிட்டார்.

அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் எழுதிய  ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம் ஆகிய 2 நூல்களும் அந்தரி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை வழங்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதுரை நகைச்சுவை மன்ற தலைவரும்  பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர் மைய இயக்குனர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர்.

முனைவர் ரா.குறிஞ்சி வேந்தன் பேசும்போது, 

”உயர்தொழில்நுட்ப வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நவீன உலகில் இப்படி ஒரு நூலை நான் பார்த்ததில்லை. நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து கொண்டு குறிஞ்சிப் பாட்டையும், குறுந்தொகையையும் தன்னுடைய புத்தகங்களில் கொண்டு வந்திருக்கிறார். இப்படிப்பட்ட புத்தங்களை கொண்டு வர இங்கு யாரும் இல்லையே என்பதில் ஆதங்கம் வருகிறது. அனைத்து கவிஞர்களையும் நினைவுபடுத்தியிருக்கிறார். இந்தப் புத்தகங்களைப் வாசிக்கும் போது கண்ணதாசன் நினைவுக்கு வருவார். சங்க இலக்கியத்தை தன்னுடைய திரைப்பாடல்களில் எப்படி கையாண்டுள்ளார் என்பதை உணரமுடியும்.

கவிதையோடு ஓவியத்தையும் சேர்த்து பார்த்தால் இலக்கியத்தை எவ்வாறு ரசிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஓவியங்கள் தமிழ் மரபு, தமிழ்ப் பண்பாடு என்ன என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.  இந்த ஓவியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஒரு நூல் இடைவெளி இருப்பதைப் பார்க்கலாம். இது தான் தமிழ்ப் பண்பாடு. தலைவியின் கூந்தல் வீசுமிடத்தில் யானையை நிறுத்தி வைத்துள்ளார். மனதை ஒருத்தனிடம் கொடுத்த பிறகு எங்கும் செல்லாது என்ற தமிழ்ச்சமூகத்தின் பண்பை ஒரு பாடலில் அழகாகச் சொல்லியிருக்கிறார் தமிழ்க்காரி என்ற  சித்ரா.  இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்மகனும், இளைஞனும் வாசிக்க வேண்டிய நூல்கள். 

இந்த புத்தகங்களை படிக்கும் போது சித்ராவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அந்த கவிதையோடு சேர்த்து மருதுவின் ஓவியங்களையும் பார்க்கும் போது, தமிழ் பண்பாட்டை அழகாக கொடுத்திருக்கிறார். பாடங்களுக்காக அயல்நாட்டிற்கு செல்பவன். அப்படி போகும்போது பார்த்த அரிய குறிஞ்சி மலர் தான் சித்ரா. இன்னும் மேலும், மேலும் அவர் எழுத வேண்டும் என்றார்.