சாமான்யர்களை சாத்து சாத்தென்று சாத்தும் மேட்டிமைப் பிரயோகம்!!

 
Green Tea

டிவிட்டர், வாட்சாப் உள்ளிட்ட பல இடங்களிலும் ஒரு வைரல் வீடியோவை நீங்க பார்த்திருக்கலாம். குறிப்பாக, டிவிட்டரில். கிரீன் டீ குடிப்பவர்களைக் கேலி செய்து, பணக்காரத்தனம் என்பதாகவும் அதற்கு எதிராகக் களமாடுவதாகவும் பகடிகள், கேலிகள்.கிரீன் டீ என்பது சீன, ஜப்பானிய, தென்கிழக்காசிய பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தவொன்று. நண்பகல் உணவுக்கு உணவகம் சென்றால் கூட, இளஞ்சூட்டில் கிரீன் டீ ஊற்றிக் கொடுப்பார்கள். நம் பண்பாட்டு உணவை யாராவது கேலி செய்தால் நமக்கு எப்படி இருக்கும்? அது போலத்தானே இதுவும்?

சரி, இனி, அந்த குறிப்பிட்ட காணொலிக்கு வருவோம். முழுமையாகப் பார்த்திருக்கவில்லை. ஒரு சிறு துண்டுதான் டிவிட்டரில், வாட்சாப்களில் பகிரப்பட்டு இருக்கின்றது. அதில் எதிர்புறத்தில் பேசியவர் சொல்கின்றார், ஆண்டிஆக்சிடண்ட்டில் பல விதம் இருக்கின்றது, கிரீன் டீயில் இன்னது... இப்படியாக. உடனே மருத்துவர் வெளிப்பட்டு ஒரேயடியாக மட்டையடி அடித்து விடுகின்றார்.  அதை வைத்து வைரல், கொந்தளிப்புகள்... ஆனால் மருத்துவரின் வாதம்தான் சிறுபிள்ளைத்தனமானது.

காஃபியையும் கிரீன் டீயையும் ஒப்பிடவே முடியாது. கிரீன் டீயில் இருக்கும் முக்கியமான ஆண்டி ஆக்சிடண்ட் காஃபியில் இல்லை. மேலும் காஃபியில் இருக்கும் காஃபைன் அளவு அதிகம். இப்படி ஆப்பிளை ஆரஞ்சோடு ஒப்பிடுவதற்குச் சமம்.

அடுத்து மேட்டிமைத்தனத்துக்கு வருவோம். அவ்வப்போது இது போன்ற காணொலிகள் வெளியாவதைப் பார்க்க முடிகின்றது. ஏதோவொரு ஊடகத்து/சமூக ஊடகத்துப் பெரியவர், சாமான்யர் ஒருவரைச் சாத்து சாத்தென்று சாத்துவார். போலிமுற்போக்காளர்கள், அவ-அறிவியலாளர்களின் கம்புச்சண்டை எப்போதும் அப்படித்தான் இருக்கும். பார்வையாளர்கள் பார்த்துக் கெக்கெலிப்புக் கொள்வர். மாய்ந்து மாய்ந்து அடுத்தவருக்கு அனுப்பி சுய இன்பம் அடைவர். அந்த சாமான்யனின் மனநிலையில் இருந்து பாருங்களேன். அந்த சாமான்யனின் மனைவி, மகன், மகள், பெற்றோருக்கு எப்படி இருக்கும்?! ஒரு மருத்துவர், இன்னோர் மருத்துவருடன் கலந்துரையாடலாம். ஒரு ஊடகப்பிரச்சாரகர் இன்னோர் ஊடகப்பிரச்சாரகருடன் சமர் செய்யலாம். ஆனால் இதென்ன மனோநிலை?! உவ்வேக்.

-பழமைபேசி

From around the web