கர்ப்பிணிகள் கபசுர குடிநீரைக் குடிக்கலாமா?
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூகப்பணியில் ஈடுபடுபவர்களுக்கும், தூய்மைத் தொழிலாளிகளுக்கும், மருத்துவத் துறை பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கபசுர குடிநீர் சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டாலே போதுமானது என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் அனைவரும் கபசுரகுடிநீரை உபயோகப்படுத்தலாம் எனவும் சித்த மருத்துவம் தெரிவித்துள்ளது.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், காலை மற்றும் மாலை இரண்டு வேளையும், எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் ஒருவேளையும், சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள், உணவுக்கு பின்னும் கபசுர குடிநீரை குடிக்கலாம்.
வெவ்வேறு விதமான மூலிகைப் பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுவதால் கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரை குடிக்க வேண்டாம் என்று கோவை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் சிவசங்கரி தெரிவித்துள்ளார்.
