‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’
- தெண்டத் தீர்வை
ஒரு ஆட்சியாளர் என்பவர், தன்னுடைய நாட்டு, மாநில மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையும், குறைகளை நீக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். இந்தியா கிராமங்களில் இருக்கிறது என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். கிராமங்களில் மக்களின் முக்கியமான தொழில் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயம்.
அப்படியானால், இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசாங்கமும் விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தானே காந்தியடிகளின் எண்ணம். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் விவசாயிகளுக்காக அணைகள் கட்டி பாசன வசதியை அதிகரிக்க முதல் நடவடிக்கை எடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர் தான். அவர் கூட, நிதிப் பற்றாக்குறை காரணத்தினால், விவசாயிகளிடம் கூடுதல் வரி வசூலித்துத் தான் அணைகள் கட்டியிருக்கிறார்.
தென் மாவட்டத்தில் மணிமுத்தாறு அணை கட்டுவதற்கு விவசாயிகளிடம் வசூல் செய்யப்பட்டதை அந்தப் பகுதியின் நண்பர் ஒருவர் உறுதி செய்தார். வரி கட்டாத விவசாயிகள் ஊரை விட்டு ஒதுக்கியும் வைக்கப்பட்டனராம். இதில் பெருந்தலைவரை குற்றம் சொல்ல எதுவும் இல்லை. அவருடைய காலத்தில் நிதிப் பற்றாக்குறை இருந்தது என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
ஒரு ஆட்சி மாறும் போது, அடுத்து வருபவர்கள் முக்கிய திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றினால் தான் நாடும் மாநிலமும் வளர்ச்சியடையும். உதாரணமாகச் சொன்னால், மதிய உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் அறிமுகப் படுத்தினார். அண்ணா – கலைஞர் ஆட்சியில் தொடர்ந்து அது செயல்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வர் ஆன பிறகு, இதை சத்துணவுத் திட்டம் என மேம்படுத்தினார். அவருக்குப் பிறகு மீண்டும் முதல்வரான கலைஞர் அவர்கள், சத்துணவுடன் முட்டை என அறிமுகப் படுத்தினார். பின்னர் ஜெயலலிதா அம்மையார் மேலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தினார். இன்றைய ஆட்சியாளர்களும் சத்துணவு திட்டத்தை, விடாமல் நடத்தி வருகின்றனர்.
சத்துணவு திட்டத்தைப் போல் விவசாயிகளின் பாசன வசதிகளுக்கு காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியிலும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டதை மறுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, அண்ணா இரண்டு ஆண்டுகாலமும் அடுத்து கலைஞர் 7 ஆண்டுகளும் ஆட்சி செய்தார். காமராஜர் கட்டிய பிறகு, கலைஞரும் அணைகள் பல கட்டியுள்ளார். அந்தந்த ஊர்களில் உள்ள அணைக்கட்டுகள், தடுப்பணைகள், கால்வாய்களில் உள்ள கல்வெட்டுகளைப் பார்த்தாலே எந்தெந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்னொரு முக்கியமான விவசாயிகளின் பிரச்சனைக்கும் கலைஞர் அவர்கள் தீர்வு கண்டார். அதாவது, ஓவ்வொரு அணைக்கும், பாசனக் கால்வாய்கள், அதற்கு உட்பட்ட பாசன நிலங்கள் உண்டு. நிலவரியும் அதற்கேற்றவாறு வசூலிக்கப் படுகிறது. இந்த நிலங்கள் தவிர பாசனக் கால்வாய்களிலிருந்து வெளியேறும் உபரி நீர் பாயும் நிலங்களும் உண்டு. அதாவது, ஒரு கால்வாய்க்கு ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசனத்திற்கு உட்பட்டது என்றால், கூடுதலாக 25 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உபரி நீர் பாயும் வாய்ப்புண்டு. பாசன நிலங்கள் பாய்ந்தது போக தண்ணீர் இருந்தால் தான் இந்த நிலத்திற்கு கிடைக்கும்.
இல்லை என்றால் கிணறு, மழையை நம்பி விளையக்கூடியவை நிலங்கள். அந்த நிலங்களுக்கும், ரெகுலர் தீர்வை வசூலிக்கப் படுகிறது. தவிர உபரி நீர் பாயும் போது தெண்டத் தீர்வை என்று ஒன்று கட்ட வேண்டும். இது கூடுதல் வரியாகும். விளையுமா இல்லையா என்று தெரியாத விவசாயி, கிடைக்கும் உபரித் தண்ணீருக்கும் வரி கட்ட வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்.
விவசாயிகள் மீது விதிக்கப்படும் தெண்டத் தீர்வையை நீக்க வேண்டும் என்று காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்தப்பா ராஜ்குமார் மன்றாடியார், கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். விவசாயிகளின் சுமையை உணர்ந்து கொண்ட கலைஞர் அவர்கள் தமிழ்நாடு முழுவதுக்கும் தெண்டத் தீர்வையை நீக்கினார்கள். அதன் பிறகு இன்று வரையிலும் தெண்டத் தீர்வை கிடையாது.
மொத்த வருவாயை கணக்கிடும் போது, அரசாங்கத்திற்கு தெண்டத் தீர்வை முலம் கிடைக்கும் பணம் குறைவானது தான். ஆனால் ஒவ்வொரு விவசாயிக்கும் அந்தத் தொகை மிகப்பெரிய சுமையாகும். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் ஒரு நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை நன்றாக உணர்ந்தவர் கலைஞர் அவர்கள். ஆகவே, விளைவிக்கும் விவசாயிகளின் துயர் துடைக்க 69ம் ஆண்டு முதலாகவே அவர் திட்டங்கள் தீட்டி வந்துள்ளார். தெண்டத்தீர்வை நீக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
விவசாயிகளுக்காக கலைஞர் அவர்கள் மேலும் செய்த பணிகளுடன் தொடர்கிறேன்.
– கார்த்திகேய சிவசேனாபதி