நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – கவியரசர் கண்ணதாசன்!

கவியரசரை நான் வாசித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சியில்லை. வெறும் வானொலி தான். முகமே பார்க்காத ஒரு ஜீவனோடு ஏன் எனக்கு இந்த விவரிக்க இயலாத ஒரு பந்தம் என நான் பல முறை யோசித்ததுண்டு. இப்படிப்பட்ட விவரிக்க முடியாத பக்தியும், பந்தமும் கவியரசரிடம் எனக்கு மட்டும் தானா என்றால், இல்லவே இல்லை. கவியரசர் என்றாலே, அவரவர்க்கு சொந்தமானவர் என்ற பிரமை எல்லோர்க்கும் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. ஏனென்றால் என்
 

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – கவியரசர் கண்ணதாசன்!வியரசரை நான் வாசித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சியில்லை. வெறும் வானொலி தான். முகமே பார்க்காத ஒரு ஜீவனோடு ஏன் எனக்கு இந்த விவரிக்க இயலாத ஒரு பந்தம் என நான் பல முறை யோசித்ததுண்டு. இப்படிப்பட்ட விவரிக்க முடியாத பக்தியும், பந்தமும் கவியரசரிடம் எனக்கு மட்டும் தானா என்றால், இல்லவே இல்லை.

கவியரசர் என்றாலே, அவரவர்க்கு சொந்தமானவர் என்ற பிரமை எல்லோர்க்கும் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. ஏனென்றால் என் வயதொத்த பலருக்கு அவர்களின் சிறு வயது நினைவுகள் கவியரசரின் பாடல்களோடு பின்னப்பட்டிருக்கிறது. அவர்களின் வாழ்க்கையிலேற்பட்ட ஆனந்தம், வருத்தம், அதற்கான ஆறுதல், குழந்தை பிறப்பு, சொந்தத்தின் இறப்பு, திருமணம், திருவிழா, உறவுகளுடன் கண்ட மன வேறுபாடு, ஆன்மீகம், வாழ்க்கையில் கண்ட வெற்றி, தோல்வி, ஏமாற்றம், இப்படிப்பட்ட அனைத்து அனுபவங்களுக்கும் கவியரசரின் கவிதைகளும் பாடல்களும் உருவம் கொடுத்திருக்கின்றன.

வாழ்வியல் தத்துவங்களை அவர்கள் கவியரசர் வரிகளில் கற்றிருக்கிறார்கள். பலர் அவர்களின் முதல் காதல் உணர்வுகளை கவியரசரின் எழுத்தில் புரிந்திருக்கிறார்கள். கவியரசரின் இனிமையான, எளிமையானத் தமிழ் எதாவது ஒரு வகையில் தொடாத தமிழ் நெஞ்சங்களே இருக்க முடியாது என்பதென் அழியாத ஆழமான நம்பிக்கை.

கவியரசரின் தமிழ் என் சிறு வயது நினைவுகளுடன் தைக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில், நீலகிரியில் ஒரு மலை கிராமத்தில் தேயிலைக் காட்டில் நாள் முழுவதும் இலங்கை ஒலி பரப்பில் கண்ணதாசன் பாடல்கள் சில்லென்ற தூறல் காற்றோடு, இதமாக ஒலித்துக் கொண்டேயிருக்கும். கூடவே என்னைப் பெற்றவள் சமையலறையில் சதா கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் தேநீரின் நறுமணமும், எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த தேயிலை தொழிற்சாலையிலிருந்து வரும் பச்சைத் தேயிலையின் வாசமும் வீசிக் கொண்டிருக்கும். அவ்வப்போது “சே…. சண்டாளன் என்னமா எழுதுறான்” எனக் கவியரசரை விமர்சித்து அவரின் பாடல் வரிகளைக் கர்ஜிக்கும் என் அப்பாவின் குரலும் கேட்கும்.

இவற்றிக்கு மத்தியில் புல் வெளிகளிலும், நதியோரத்திலும், அக்கேஷா, சாம்பிராணி காடுகளிலும் காலணி களைந்து கவலைகளின்றி பழங்களும், காட்டுப் பூக்களும் பறித்துக் கொண்டு என் உடன் பிறப்புகளுடன் நான் ஓடித் திரிந்த காலம் அது. அந்த நாட்களை நான் மீண்டும் வாழ முடியாது. ஆனால் அந்த ஞாபகங்கள் என் மூளைப் பரண்களில் கிடந்து இன்றும் கவியரசரின் தமிழ் வழியாக என் உயிருக்கு உதிரம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன என்பது தான் நிஜம்.

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கண்ணே கலை மானே, ஆடி வெள்ளி, பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கம்பன் ஏமாந்தான், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அத்திக் காய் காய் காய், தோள் கண்டேன், பொதிகை மலை உச்சியிலே, பாட்டும் நானே பாவமும் நானே, என இப்படி இன்னும் பல ஆயிரக் கணக்கான பாட்டுகளை, உறவின் உணர்வுகளை, உலக அனுபவங்களை, மென்மையாக, மேன்மையாக, தனித்தமிழில் பொருள் வளம் சிறக்க படைத்தவர் நம் கவியரசர்.

அப்போது தொலைக்காட்சிகள், கணினிகள், சமூக வலைத்தளங்கள், கைப்பேசிகள், மின்னஞ்சல்கள் என்று இப்படி எதுவுமே இல்லை. ஆனாலும் கவியரசர் தான் கற்ற பண்டையத் தமிழ் இலக்கியங்களையும், ஆங்கில மொழிக் கவிதைகளையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் தன் தமிழ் ஞானத்தால் சாறு பிழிந்து பட்டித் தொட்டிகளுக்கெல்லாம் வானொலி மற்றும் பத்திரிக்கைகள் மூலம், கொண்டு சேர்த்தவர். கடைசி பாமரனுக்கும் அவர் தமிழை ஊட்டி, அதை ரசித்து, ருசித்து உண்ண வைத்தவர்.

அர்த்தமுள்ள இந்து மதம் வாசித்து, முருக பக்தர் கிருபானந்த வாரியார் கவியரசரை கிருஷ்ணரின் அவதாரம் என்று சொன்னது, இன்று என் நினைவைத் தட்டுகிறது. உண்மை தானே…கிருஷ்ணனின் அருள் கவியரசருக்கு இல்லாமல் இருந்திருந்தால், இன்றும் எட்டுத் திக்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணகானம் ஒரே இரவில் அவரால் எப்படி எழுதியிருக்க இயலும்?

இறையருள் அவருக்கு இல்லாமல் இருந்திருந்தால், கிருஸ்துவத்தில் பல பட்டங்கள் வாங்கிய அறிஞர்களும் எழுத இயலாத இயேசுவின் காவியத்தை பதினைந்தே நாட்களில் எப்படி நமக்கு அவரால் படையல் போட்டிருக்க இயலும்?

எனக்கு மிக மிக பிடித்த கவியரசரின் கவிதை வரிகள்,
“கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்”

ஆமாம்! பொன்னிலும் விலைமிகு திகட்டாத தித்திக்கும் தேன் தமிழ் அவரது செல்வம்.
அதனால் தான்

” நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்”
எனப்பாடி நம்மையெல்லாம் இன்றும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார் நம் கவியரசர்.

– புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

A1TamilNews,com

From around the web