காங்கிரஸ் ஆட்சிகள் கவிழ்ந்தது ஏன்? கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஆய்வும் தீர்வும்!

 
காங்கிரஸ் ஆட்சிகள் கவிழ்ந்தது ஏன்? கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஆய்வும் தீர்வும்!

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சி கட்சி விசுவாசிகளிடையே கவலை உண்டாக்கியுள்ளது. ஜூலை 2019 ல் கர்நாடகா, மார்ச் 2020 ல் மத்தியப் பிரதேசம் தற்போது புதுச்சேரி  என மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ க்களே  தங்கள் கட்சி ஆட்சியை கவிழ்த்தார்கள். பாஜக வில் இணைந்தார்கள். விரைவில் அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா  மேற்குவங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ்  தலைவர்  பி.கே. ஹரிபிரசாத்  பெப்ருவரி 23  அன்று கருத்து தெரிவித்துள்ளார்.  வேட்பாளர் தேர்வு அளவுகோல் மாறவேண்டும்.பணம் உள்ளவர் தான் வேட்பாளர் என்ற சிந்தனை மாறவேண்டும். வட்டார மாவட்ட கட்சி  அமைப்புகள் மட்டத்தில்  வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என ஹரி பிரசாத் கூறியுள்ளார். விசுவாசிகளை விட சந்தர்ப்பவாதிகளுக்கு கட்சி முக்கியத்துவம் கொடுப்பதால் திடீரென அவர்கள் வேறு கட்சிக்கு தாவுகிறார்கள்.

மாநிலத்தில் நாம் ஆட்சி அமைத்தால் நம் தலைவர்கள் கட்சி எம் எல் ஏ க்கள், மற்றும் தொண்டர்களுடன் தொடர்பை துண்டித்து விடுகிறார்கள் என கவலை தெரிவித்துள்ளார் பீகாரை சேர்ந்த ஏஐசிசி உறுப்பினர் கிஷோர் ஜா. வேட்பாளர்களை முடிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய தேர்தல் குழு தேவை என ஜனவரி  23 அன்றே  குரல் எழுப்பினார் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். 

மக்களோடும் தொண்டர்களோடும் தொடர்பும் செல்வாக்கும் உள்ள வேட்பாளர் தான் ஜெயிக்க முடியும், கட்சி தாவாமலும் இருப்பர்.  இருக்கிற மாநிலங்களில் ஆட்சியை தக்கவைக்கவும் எதிர்காலத்தில் கைப்பற்றும் ஆட்சியை காப்பாற்றவும் வேட்பாளர் தேர்வில் தான் சூட்சுமம் உள்ளது என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுட்டி காட்டிவிட்டனர். கிராம, நகர மாவட்ட கமிட்டிகள் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட மூத்த கட்சி விசுவாசிகளை காங்கிரஸ் வேட்பாளர்களாக  அறிவிக்க வேண்டும். வானத்தில் இருந்து பாராசூட்டில் வேட்பாளர்களை இறக்க கூடாது.

-வி.எச்.கே. ஹரிஹரன்

A1TamilNews