ஆட்சியில் அமர்த்தியவரே ஆட்சியை பறிகொடுப்பாரோ! கர்நாடகா பாஜகவில் குழப்பம்!!

தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற இடம் கொடுத்த கர்நாடகத்தில் அதேகட்சியினரின் உள்குத்து தொடங்கிவிட்டது. சித்தாந்த பிடிப்பு, கட்சி கட்டுப்பாடு இவற்றில் கவனமாக உள்ள பாஜக கர்நாடகத்தில் கோஷ்டி மோதலில் சிக்கித் தவிக்கிறது. பாஜக எம்எல் ஏ யும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகௌடா பட்டீல் யத்னல் , முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகிய இருவரும் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கி வருகிறார்கள். அவர்களுடையகுடும்பத்தினர் பெரிய அளவில் ஊழலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எடியூரப்பா குடும்பத்தினர் சுமார் 30 பேர் முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளனர். அரசுதிட்டப்பணி ஒப்பந்தங்கள், அரசுப்பணியாளர் இடமாறுதல் இவைகளுக்கு கையூட்டு வாங்குகிறார்கள். எடியூரப்பா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இந்த உறவினர்களை காணவில்லை. எடியூரப்பாவிற்கு வயதாகி விட்டது, மிகவும் தளர்ந்து விட்டார், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக்காலத்தில் அவருடன் ஒரு சமையலரும் உதவியாளரும் மட்டும் இருந்தனர்.
முதல்வரின் மகன் முன்னால், எம் எல் ஏ க்கள் நின்றுகொண்டே பேச வேண்டியுள்ளது. பதவிக்காக அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று யத்னல் பொரிந்து தள்ளிவிட்டார்..யத்னல் கூற்றை பாஜக மேலிடம் கவனிக்க வேண்டும். மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆட்சியில் இருப்பவர்கள் உரிய மரியாதை தரவேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கும் இது பொருந்தும். லஞ்ச ஊழல் , குடும்ப அரசியல் இல்லாத வெளிப்படையான அரசுநிர்வாகம் தருவோம் என முழங்கி ஆட்சிக்கு வந்த பாஜக, பசனகௌடா பட்டீல் யத்னல் குற்றச்சாட்டை அலட்சியம் செய்யக்கூடாது. அதில் உண்மை இருந்தால் எடியூரப்பாவிற்கு ஓய்வு கொடுப்பதே நல்லது.
-வி.எச்.கே. ஹரிஹரன்