புதுவையில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் என்ன..?

 
புதுவையில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் என்ன..?

புதுவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, மக்கள் அதிகம் கூடும் விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், தேநீர் கடைகள் ஆகிய இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், தேநீர் கடைகள் பார்சல்கள் மட்டும் அனுமதி. கோயில்களில் பொது வழிபாட்டுக்கு தடை.

வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.

திருமண விழாக்களில் 50 நபர்கள் மற்றும் இறுதி சடங்குகளில் 25 பேர் மட்டும் அனுமதி. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. கார் மற்றும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் அனுமதி. சிவப்பு கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு முகாம்கள் மூலமாக கொரோனா

பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை மேலும் அதிகப்படுத்த நடவடிக்கை. கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தருவது மற்றும் அவர்கள் சுமையின்றி பணியாற்றுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே மாதம் முதல், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவுள்ளதால் அது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web