உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ கன்னத்தில் அறைந்த விவசாயி; வைரலாகும் வீடியோ

 
BJP-MLA-slap

உத்திரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ கன்னத்தில் விவசாயி அறைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பங்கஜ் குப்தா ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். அப்போது மேடையில் ஏறிய முதியவர் ஒருவர் பங்கஜ் குப்தா கன்னத்தில் அறைகிறார். 21 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ, மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனைத்தை வைத்து உள்ளன.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. அதில், பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் எம்எல்ஏவை அறைந்துள்ளார். அவர் மீது விழுந்த அறை, எம்எல்ஏ மீதான கோபத்தில் அல்ல, பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கை, ஆட்சிக்கு விழுந்த அடி என்று விமர்சித்துள்ளனர்.

இதனிடையே, அடித்த முதியவருடன் பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் முதியவரிடம் அன்பாக அடித்ததாக கூறுகிறீர்கள்..? ஆனால், அது தவறான தோற்றத்தை கொடுக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த அந்த முதியவர், நான் அவரை அடிக்கவில்லை.. நான் அவரை நெருங்கிவந்து, மகனே என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

அப்போது குறுக்கிட்ட பாஜக எம்எல்ஏ, “உண்மை என்னவெனில், இந்த சம்பவத்தை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சிகள் திரித்துள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடைக்கவில்லை. அதனால், விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை காட்ட விரும்புகிறார்கள். இந்த முதியவர் என் தந்தையைப் போன்றவர், அவர் ஏற்கனவே இதேபோல் செய்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

From around the web