இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது: ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே

 
Raosaheb-Patil-Danve

பெட்ரோல், டீசல் விலையை அமெரிக்கா தான் முடிவு செய்வதாகவும், இந்த விவகாரத்தில் இந்திய அரசை குறை சொல்வது தவறு என்றும் ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே கூறினார்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான ஒன்றிய ரயில்வே மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே நேற்று அவுரங்காபாத்தில் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம், நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

“நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பேரணி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை குறி வைப்பது நியாயமற்றது. எரிப்பொருள் என்பது உலக சந்தை விலை நிலவரத்துடன் தொடர்புடையது. ஒருநாள் 35 பைசா விலை கூடும், அடுத்த நாள் 1 ரூபாய் வரை குறையும், மறுபடியும் 50 பைசா விலை அதிகரிக்கும்.
இந்த விலையானது அமெரிக்காவில் தான் முடிவு செய்யப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இந்திய அரசை குற்றம் சாட்டுவது தவறு.

ஒன்றிய அரசு தீபாவளிக்கு முன்பு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை வெகுவாக குறைத்தது. அதேபோல பாஜக ஆளும் மாநில அரசுகளும் வரியை குறைத்தன.

ஆனால் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதற்கு தயாராக இல்லை. அந்த மாநிலங்களும் வாட் வரியை குறைக்கவேண்டும். ஒன்றிய அரசின் நிதியில் தான் நாடு இயங்குகிறது. இதை பற்றி மக்களிடம் நாம் எடுத்து சொல்ல வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web