மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு - உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

 
Supreme-Court

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத ஒதுக்கீடும் இந்த ஆண்டிலேயே வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஆனால் இது ஏராளமான மாணவர்களை பாதித்துள்ளதால், இந்த இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என மருத்துவ மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கான வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்ற வரையறையை மறுபரிசீலனை செய்ய தயார் என்றும், அதுவரை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் ஒன்றிய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா கடந்த நவம்பர் மாத விசாரணையின்போது தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதன்படி இந்த வழக்கின் விசாரணை நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. அப்போது ஆஜரான துஷார் மேத்தா, மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை தொடங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘மருத்துவக் கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தகுதியை மதிப்பிடக்கூடாது, மனித விழுமியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த ரிட் மனுக்கள் மீதான உத்தரவை 7-ந் தேதி (இன்று) பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

அதன்படி இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே போல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியல் சாசனத்தின்படி இது அனுமதிக்கத்தக்கது தான் என நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். அதே நேரம் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வரையறை குறித்து மார்ச் 3-வது வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web