மண்ணின் மைந்தருக்கே  வேலை சட்டம்! நீண்டகால பலன் தருமா?

 
மண்ணின் மைந்தருக்கே வேலை சட்டம்! நீண்டகால பலன் தருமா?

தேர்தல் கால ஆதாயத்துக்காக சில மாநில அரசுகள், கட்சிகள்    மண்ணின் மைந்தருக்கே வேலை  என்ற கோஷத்தை முன்னெடுத்து வருகின்றன. ஹரியானா மாநில பாஜக அரசு தற்போது அந்த கோஷத்தை சட்டம் ஆக்கிவிட்டது. மாத சம்பளம் ரூ 50 ஆயிரம் உள்ள வேலைகள்  75  %  உள்மாநிலத்தவருக்கே வழங்கப்பட வேண்டும் . ரூ 50  ஆயிரம் மாத சம்பளம் பெறும் பணியாளர்கள் பெயர்கள் அரசு வெப் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட பணிக்கான திறன் உள்ள ஆட்கள் உள்மாநிலத்தில் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்த பின் அந்த வேலைக்கு வெளி மாநிலத்தவரை அமர்த்தலாம். வெளிமாநிலத்தவரை பனி அமர்த்தலாமா அல்லது உள்மாநிலத்தவரை அமர்த்தி பயிற்சி அளிக்கலாமா என்பதை மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவெடுப்பர். என சட்டம் சொல்லுகிறது. 

ஆந்திரப் பிரதேசம் 2019 இல்  இது போன்ற சட்டம் நிறைவேற்றியது. மத்திய பிரதேச மாநில பாஜக முதல்வர்  70 %தனியார்துறை பணிகள் உள்மாநிலத்தவர்க்கே  என சட்டம் இயற்ற உறுதி அளித்துள்ளார்.  பீகார் மாநில வங்கிகளில் செய்யப்படும் டெபொசிட்டுகளுக்கு இணையாக கடனுதவி கிடைப்பதில்லை என அம்மாநில  ஐக்கிய ஜனதா தள   முதல்வர் நிதிஷ் குமார்  கொடி  தூக்குகிறார்.  மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக  இந்த கோஷத்தை முழங்கி வருகின்றன.  குர்கான் ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தினால் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஆட்டோ பாகங்கள்   விநியோகம் ,விற்பனை பாதிக்கும். வெளிமாநிலத்தவர் தொழில் முதலீடுகள் தடைபடும். ஒரே நாடு ஒரே சந்தை  என்ற பாஜக வின் முழக்கத்துக்கு மாறாக உள்ளது இந்த சட்டம்.

காங்கிரஸ், பாஜக எந்த கட்சி ஆளும் மாநிலமும் இதுபோன்ற சட்டம் இயற்றக்கூடாது.  ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இதுபோன்ற சட்டங்கள் இருந்தபோது எந்த அரசியல் கட்சியும் மீடியாவும் எதிர்க்கவில்லை. கடைநிலை ஊழியர்கள் நியமனத்துக்கு இப்படி தடைகள் எந்த மாநிலத்திலும் இல்லை. சாலைப்பணி, கட்டுமானப்பணி ,ஆயத்த ஆடை, ஸ்பின்னிங் மில் இவைகளுக்கு   கடைநிலை    பணியாளர்கள் மட்டும் பிறமாநிலத்தில்  இருந்து அழைத்து வரப்படுகிறார்கள் என்பது கவனிக்க தக்கது.

- வி.எச்.கே.ஹரிஹரன்