11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!

 
Exam

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கொரோனா 2-வது அலையால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்நிலையில், வருகிற 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 11-ம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்த கேரள அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கில், பள்ளித் தேர்வை நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ரசூல்ஷான் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், “கேரளாவில் அபாயகரமான அளவுக்கு கொரோனா சூழல் நிலவுகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் கேரளாவில் உள்ளனர். இந்நிலையில் 11-ம் வகுப்பு வயது குழந்தைகளை அபாயத்துக்கு உள்ளாக்க முடியாது” என்று கூறி, அடுத்த விசாரணை வரை, 11-ம் வகுப்பு தேர்வை நேரடியாக நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தனர்.

பின்னர் அடுத்த விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

From around the web