அதிகரித்து வரும் கொரோனா.. பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!

 
Temp-bed-in-hospital

மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, “அமெரிக்கா மற்றும்  ஐரோப்பாவில் தினசரி தொற்றின் வேகம் அதிகரிப்பது வைரசின் அதிவேக பரவல் தன்மையை காட்டுகிறது.

இந்தியாவில் கடந்த 70 நாட்களில் இல்லாத அளவு தினசரி தொற்று  16 ஆயிரத்து 764 ஆக  பதிவாகியுள்ளது.

இந்தியாவில் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்கள் தேவைக்கேற்ப தற்காலிக சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாகும்போது ஆரம்ப சிகிச்சையை வீட்டில் இருந்தே பெறும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

From around the web