ஆபரேஷனுக்காக சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை கடித்துக் குதறிய எலிகள்..!

 
Telangana

விவசாயி ஒருவர், தனது ஆபரேஷனுக்காக இரு சக்கர வாகனத்தில் சென்று காய்கறி விற்று சேர்த்து வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயை, எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள வேம்நூர் கிராமத்தைச் சேர்ந்த காய்கறி விவசாயி ரெத்யா நாயக். வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், மெகபூபாபாத் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “அடிவயிற்றில் கட்டி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில்தான் அதை ஆபரேஷன் செய்து அகற்ற முடியும். அதற்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும்” எனக் கூறியுள்ளனர்.

இதற்காக அவர், இரு சக்கர வாகனத்தில் தெருத்தெருவாகச் சென்று காய்கறிகள் விற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஒரு துணிப் பையில் போட்டு அலமாரியில் வைத்துள்ளார். இந்நிலையில், தனது ஆபரேஷனுக்காக சிலரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.

அத்துடன், அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க அலமாரியில் இருந்த அந்தப் பையை எடுத்து திறந்துள்ளார். அப்போது, பையில் இருந்த பணம் முழுவதையும் எலிகள் கடித்துக் குதறியுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Telangana

இதையடுத்து, எலிகளால் சேதமடைந்த பணத்தை மாற்றுவதற்காக உள்ளூர் வங்கிகள் அனைத்திற்கும் நடையாய் நடந்துள்ளார் நாயக். ஆனால், “அழுக்கான மற்றும் கசங்கி கிழிந்த நிலையில் உள்ள பணத்தைத்தான் நாங்கள் மாற்றிக் கொடுக்க முடியும்; எலி கடித்து சேதமான பணத்தை மாற்ற வேண்டுமானால் நீங்கள் ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்” என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெலுங்கானா பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்தியவதி ரத்தோட், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உதவ முன்வந்துள்ளார். இதையடுத்து நாயக்கிடம், அவருக்கு விருப்பமான மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொள்ளுமாறும், அதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் சத்தியவதி ரத்தோட்க்கு விவசாயி ரெத்ய நாயக் நன்றி தெரிவித்தார்.

From around the web