புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

 
puducherry

புதுச்சேரியில் போக்குவரத்து போலீசாரை கண்டித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையாநாயுடு 3 நாள் பயணமாக புதுச்சேரி வந்தார். அவரது வருகையையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் செல்லும் இடங்களில் சாலையில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பாஜகவின் முக்கிய நிர்வாகியான ரவி (வயது 64) என்பவர் மிஷன் வீதியில் பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

அவரது கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி போக்குவரத்து போலீசார் அதனை அகற்றும்படி கூறினர். அப்போது அவருக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் ரவியின் மகனான, புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை டாக்டர் துரை (வயது 35) அங்கு வந்தார். அவரையும் போலீசார் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த பாஜக நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சுயேச்சை எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர் பாஜகவினருடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.

உடனே அமைச்சர் லட்சுமிநாராயணன் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web