படத்துல மட்டும் இல்ல.. நிஜத்திலேயும் அப்படித்தான்... போதைப்பொருள் கடத்திய நடிகர் கைது!

 
Malvin

சிங்கம் படத்தில் நடித்த நைஜீரியாவைச் சேர்ந்த நடிகர் மெல்வின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'சிங்கம் 2'. இந்தப் படத்தில் போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக நடித்திருப்பார் டேனி சபானி. இவரது கூட்டாளியாக நைஜீரியாவைச் சேர்ந்த காக்விம் மெல்வின் என்பவர் நடித்திருப்பார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் மெல்வின் நடித்துள்ளார். மேலும் பெங்களூருவில் தங்கி பல்வேறு படங்களில் நடித்து வந்துள்ளார்.

ஆனால் நடிப்பின் மூலம் போதிய வருமனாம் கிடைக்காததால், தனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி படத்தில் வருவதுபோலவே போதைப் பொருட்களைக் கடத்தி மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதைப் பொருள் கும்பல் ஒன்றைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மெல்வின் குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் மெல்வின் வீட்டில் அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், ஹாசிஸ் கஞ்சா எண்ணெய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம். மேலும் ரூ. 5,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றையும் மெல்வினிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

From around the web